| 166 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
பவர்மொசிந் தோம்பிய திரள்பூங் கடம்பின் கடியுடை முழுமுதல் துமிய ஏஎய் வென்றெறி முழங்குபனை செய்த வெல்போர் நாரரி நறவின் ஆர மார்பின் போரடு தானைச் சேரலாத (2ஆம் பத்து 1 : 12-16) என்று அவர் கூறுகிறார். இதில் ‘கடம்பின் கடியுடை முழு முதல் துமிய ஏஎய்’ என்று கூறுவது காண்க (ஏய்=ஏவி). தந்தை ஏவிய படி செங்குட்டுவன் இப்போரைச் செய்து வென்றான். இதனால் தான், கடற்போரை முதல்முதலாகச் செய்தவன் செங்குட்டுவன் என்று பரணர் கூறினார். கடற்போரைச் செய்த காலத்தில் செங்குட்டுவனுக்கு வயது 20 அல்லது 25 இருக்கும். அரபு நாட்டிலிருந்தும் எகிப்து, ரோமாபுரி முதலிய நாடு களிலிருந்தும் வாணிகத்தின் பொருட்டுக் கடல் வழியாக வந்த மரக்கலங்களைச் சேர நாட்டின் துறைமுகப்பட்டினங்களுக்கு வராதபடி இடை மறித்துத் தடுத்துக் கொள்ளையடித்துக் கொண்டிருந்த குறும்பர்களை அடக்குவதற்காக இப்போர் நடந்தது என்று கருதலாம். பிளினி என்னும் யவனர் இவ்விடத்தில் கடற்கொள்ளைக்காரர் இருந்தனர் என்று எழுதியுள்ளார். கடற்றீவிலிருந்த இந்தக் குறும்பர்கள் தங்களுக்குக் காவல் மரமாகக் கடம்ப மரத்தை வளர்த்திருந்தார்கள். அந்தக் காவல் மரத்தைத் தான் செங்குட்டுவன் வெட்டினான். அந்தக் குறும்பர்கள், துளு நாட்டு நன்னனுக்கு அடங்கியிருந்த துளுவர் எனத் தோன்றுகின்றனர். தந்தையும் மகனும் சேர்ந்து நடத்திய போர் ஆகையினாலே, கடம்பறுத்த செய்தி இருவர் மேலும் கூறப்படுகிறது. சேரன் செங்குட்டுவன் என்னும் நூலில் திரு.மு. இராகவையங்கார் அவர்கள், நெடுஞ்சேரலாதன் செய்த கடற்போர் வேறு, செங்குட்டுவன் செய்த கடற்போர் வேறு என்று பொருள்பட எழுதியிருப்பது தவறாகும். கடந்தடுதார்ச் சேரன் கடம்பெறிந்த வார்த்தை படர்ந்த நிலம் போர்த்த பாடலே பாடல் (சிலம்பு 29, வள்ளைப்பாட்டு, 3) என்றும், |