பக்கம் எண் :

182மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

வயங்கிய மறம்புரி கொள்கையைப் பாடின கபிலன் பெற்ற ஊரினும் பலவென மாறிக்கூட்டி வினைமுடிவு செய்க.’

இதனால், இவனுடைய படைவீரர் சென்னியர் பெருமான் (சோழன்) உடன் போர் செய்தனர் என்பதும் அப்போரில் சோழனுடைய படைவீரர் தங்கள் வேல்களைப் போர்க்களத்தில் போட்டுவிட்டு ஓடினார்கள் என்பதும், அந்த வேல்களின் எண்ணிக்கை, செல்வக்கடுங்கோ வாழியாதனைப் (பதிற்றுப்பத்து ஏழாம் பத்து) பாடின கபிலர் பரிசாகப் பெற்ற ஊர்களின் தொகையைவிட அதிகமாக இருந்தன என்பதும் தெரிகின்றன. இவ்வாறு தோற்றுப்போன சோழன் பெயர் கூறப்படவில்லை. ஆனால், அச்சோழன் பெயர் `பொத்தியாண்ட பெருஞ்சோழன்’ என்று (9ஆம் பத்துப் பதிகம்) கூறுகிறது. இந்தப் போரைப் பற்றிய வேறு செய்திகள் தெரியவில்லை.

மேலும், இளஞ்சேரல் இரும்பொறை ஐந்தெயில் என்னும் கோட்டையை முற்றுகையிட்டுச் சோழன், பாண்டியன், விச்சி, இளம்பழையன் மாறன் என்பவர்கiம் வென்று அவர்களிட மிருந்து கொண்டு வந்த பொருள்களை வஞ்சிமூதூரில் வைத்துப் பலருக்கும் வழங்கினான் (9 ஆம் பத்து, பதிகம், அடி 3-9)

பூதர் என்னும் தெய்வங்களைக் கொண்டு வந்து வஞ்சி மூதூரில் அமைத்து அவற்றிற்குச் சாந்தியும் சிறப்பும் செய்தான். இதனை,

அருந்திறல் மரபிற் பெருஞ்சதுக் கமர்ந்த
வெந்திறல் பூதரைத் தந்திவண் நிறீஇ
ஆய்ந்த மரபிற் சாந்தி வேட்டு

(9ஆம் - பத்து. 13-15)

என்பதனாலும்

சதுக்கப் பூதரை வஞ்சியுட் டந்து
மதுக்கொள் வேள்வி வேட்டோன்

(சிலம்பு - நடுகல்: 147-148)

என்பதனாலும் அறியலாம்.

இளஞ்சேரல் இரும்பொறைக்கு அமைச்சனாக இருந்தவர் மையூர்கிழார் என்பவர். மையூர்கிழாரை இவ்வரசன் அறநெறியில் வல்லவனாகச் செய்தான்.