பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்185

உரையாசிரியர் உரை கூறுகிறார். வடநாட்டு வேந்தர் தமிழக வேந்தரை இகழ்ந்து கூறியதற்காகச் செங்குட்டுவன் வஞ்சினஞ் கூறியபோது, அருகிலிருந்த ஆசான் (புரோகிதன்) அவனுடைய கோபம் தணியும்படிச் சில வார்த்தை கூறினான். (சிலம்பு. கால்கோள். 19-24) பத்தினிக் கோட்டத்துக்குச் செங்குட்டுவன் போனபோது ஆசானாகிய புரோகிதனும் உடன் போனான். (சிலம்பு. நடுகல். 222 - 223)

செங்குட்டுவனுடைய சேனைத் தலைவன் பெயர் அழும்பில் வேள் என்று தெரிகிறது. பத்தினிக் கடவுளுக்குக் கல் எடுக்கச் செங்குட்டுவன் வடநாடு செல்லக் கருதியபோது, அமைச்சனாகிய வில்லவன் கோதை, இதற்காகத் தாங்கள் செல்ல வேண்டாம், வட நாட்டரசருக்குக் கடிதம் எழுதினால் அவர்கள் கல் எடுத்து அனுப்புவார்கள் என்று கூற, சேனைத் தலைவனாகிய அழும்பில் வேள், வடநாட்டுச் செலவுபற்றி வஞ்சிமாநகரத்தில் பறையறைந்து தெரிவித்தால் இச்செய்தியை ஒற்றர் மூலமாக வடநாட்டரசர் அறிவார்கள் என்று கூறினான். அதைச் செங்குட்டுவன் ஏற்று அவ்விதமே செய்தான் (சிலம்பு. காட்சி 173 - 178) கண்ணகிக்கு விழா தொடங்கியபோது, சிறைப் பட்டிருந்த அரசர்களைச் சிறையிலிருந்து விடும்படி சேனாபதியாகிய அழும்பில்வேளை ஏவினான்.

சிறையோர் கோட்டம் சீமின் யாங்கணும்
கறைகெழு நாடு கறைவீடு செய்ம்மென
அழும்பில் வேளோடு ஆயக் கணக்கரை
முழங்குநீர் வேலி மூதூர் ஏவி

(சிலம்பு - நடுக்கல். 203 - 206)

செங்குட்டுவனுக்குத் தூதர் பலர் இருந்தார்கள். அத்தூதர் களின் தலைவன் பெயர் சஞ்சயன். அவர்கள் தலைக்கீடு (தலைப்பாகை?) கட்டிச் சட்டையணிந்திருந்தனர்.

சஞ்சயன் முதலா தலைக்கீடு பெற்ற
கஞ்சுக முதல்வர் ஈரைஞ் ஞூற்றுவர்

(சிலம்பு - கால்கோள்: 137-138 143 - 145)