பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 239 |
(தமிழ் மரபை யறியாத இக்காலத்து மலையாளிகள் சிலர் வானவரம்பன், இமயவரம்பன் என்னும் பெயர்களை வான (பாண) வர்மன், இமயவர்மன் என்று கூற முற்பட்டுள்ளனர். வர்மன் என்னும் பெயரைப் பிற்காலத்தில் அரசர்கள் தங்கள் பெயருடன் அமைத்துக் கொண்டது உண்மையே. உதாரணமாக மகேந்திரவர்மன், நரசிம்ம வர்மன், நந்திவர்மன், மார்த்தாண்ட வர்மன் முதலியன. ஆனால், சங்க காலத்தில், தமிழரசர்கள் வர்மன் என்னும் பெயரைச் சூட்டிக்கொள்ள வில்லை. இந்தச் சரித்திர உண்மையை யறியாத சிலர் இமயவர்மன், வான (வாண) வர்மன் என்று திரித்துக்கூறுவது தவறானது.) இமயவரம்பன், வானவரம்பன் என்னுஞ் சொற்களின் உண்மை யான உருவம் இமையவரன்பன், வானவரன்பன் என்றிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. (இமையவர் + அன்பன் = இமையவரன்பன், வானவர் + அன்பன் = வானவரன்பன்) இமயவர் என்றால் தேவர். வானவர் என்றாலும் தேவர் என்பது பொருள். இமையவரன்பன், வானவரன்பன் என்னுஞ் சொற்கள் பிற்காலத்தில் ஏடெழுதுவோரின் கைப்பிழையால் இமயவரம்பன் வானவரம்பன் என்று மருவிவிட்டன என்று கருதலாம். வானவர் அல்லது இமையவர் ஆகிய தேவர்களுக்குப் பிரியமானவன் என்னும் பொருளில் இப்பெயர்கள் சேர மன்னருக்கு வழங்கப் பட்டுப் பிற்காலத்தில் பூதேவராகிய பிராமணருக்கு அன்பன் என்னும் பொருளில் வழங்கப்பட்டன. தேவர் என்னும் பொருள் உள்ள இமையவர், வானவர் என்னுஞ் சொற்கள் பிற்காலத்தில் பிராமணர் என்னும் பொருளில் வழங்கப்பட்டன. பிராமணர் தங்களைப் பூதேவர் என்று கூறிக்கொண்டனர். ‘பொய்யக மில்லாப் பூசுரர் வாழும் புறவம்மே’ என்றும் ‘பூவால் நீரால் பூசுரர் போற்றும் புத்தூரே’ என்றும் ‘தரைத்தேவர் பணிசண்பை தமிழ்க்காழி’ என்றும் பிற்காலத்துத் திருஞான சம்பந்தர் தமது தேவாரத்தில் கூறியிருப்பது காண்க. மற்றத் தமிழ் வேந்தர்களை விட சேர நாட்டு மன்னர்கள் பிராமணர்களை அதிகமாகப் போற்றி அவர்களுக்குத் தான தருமங்களை அதிகமாகச் செய்திருப்பதைச் சங்க நூல்களில் நன்கு காணலாம். பிராமணரிடம் அதிக அன்புள்ளவராக இருந்தது பற்றியே சேர மன்னர் இமையவரன்பர், வானவரன்பர் என்று பெயர் பெற்றிருக்கக் கூடும் என்பதற்குச் சான்றும் இருக்கிறது. பதிற்றுப் பத்து ஆறாம் பத்தின் பதிகத்தில் இதற்குச் சான்று காணப் படுகிறது. ஆடுகோட்பாட்டுச் |