244 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
சிலப்பதிகாரம்: மேலே கூறியபடி சிலப்பதிகாரம், கோவலன் கண்ணகியின் வரலாற்றைக் கூறுகிறது. இது அவலச் சுவையுடைய வரலாறு. செல்வச் சீமானாகப் பிறந்த கோவலன், செல்வச் சீமான் மகள் கண்ணகியை மணந்து வாழ்ந்து வந்தான். சில காலத்துக்குப் பிறகு அவன், மாதவி என்னும் நாடகக் கணிகையின் ஆடல் பாடல் களில் ஈடுபட்டுக் கண்ணகியைத் துறந்து மாதவியின் இடத்திலே தங்கித் தன் செல்வங்களையெல்லாம் செலவு செய்து வறுமை யடைந்தான். பிறகு, தான் செய்த தவற்றை உணர்ந்து, கண்ணகி யிடஞ் சென்றான். கண்ணகியிடம் அவளுடைய காற்சிலம்புகள் மட்டும் இருந்தன. அதை விற்று அப்பணத்தை முதலாக வைத்து வாணிகஞ் செய்து இழந்த செல்வத்தைச் சம்பாதிக்க எண்ணி அவனும் கண்ணகியும் உற்றார் உறவினருக்குச் சொல்லாமலே மதுரைக்குப் போனார்கள். கவுந்தியடிகள் என்னும் சமண சமயப் பெண்பால் துறவியார், வழியில் எதிர்ப்பட்டு அவர்களுடன் மதுரைக்குச் சென்றார். இவர்கள் மூவரும் காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்து கால்நடையாகவே நடந்து மதுரைக்குச் சென்றார்கள். மதுரையை யடைந்ததும் கவுந்தியடிகள், துறவிகள் தங்கி யிருந்த இடத்தில், நகரத்துக்கு வெளியே தங்கினார். அவர்களுடன் சென்ற கோவலன் கண்ணகியர், துறவிகளுடன் தங்கியிருக்கக் கூடாதாகை யால், மதுரை நகரத்தில் தங்க ஒரு இடத்தைக் கண்டு வரும்படி கவுந்தியடிகள் கோவலனுக்குக் கூற, கோவலன் நகரத்துக்குள் சென்று நகரத்தைச் சுற்றிப் பார்த்துத் தங்கியிருக்க இடம் ஏற்படுத்தாமலே திரும்பிவந்துவிட்டான். செல்வச் சீமானாக வாழ்ந்திருந்த தான், இப்போது வறுமையடைந்த நிலையிலும், பிறர் இல்லத்தில் சென்று தங்குவது தன்னுடைய தன்மானத்துக்குத் தாழ்ந்ததாக அவன் கருதினான். தான் இன்னான் என்பதை மதுரை வணிகரிடம் இவன் கூறியிருந்தால் அவர்கள் இவன் குலப்பெருமை காரணமாக இவனைத் தங்கள் விருந்தினனாக விரும்பி ஏற்றுக் கொண்டிருப்பார்கள். கோவலன் அவ்வாறு பிறர் ஆதரவில் தங்கியிருக்க விரும்பவில்லை. தங்க இடந் தேடாமல் திரும்பிவந்த கோவலனையும் தன்னுடன் இருந்த அவன் மனைவி கண்ணகியையும் கவுந்தி யடிகள், மாதரி என்னும் இடைக்குல மூதாட்டியிடம் அடைக் கலமாகக் கொடுத்து |