பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 243 |
நூல்கள் அக்காலத்தில் தமிழில் இருந்தன என்பதற்குச் சான்றுகள் உள்ளன. தொடர்நிலைச் செய்யுளாகச் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் இவ்விரு பெரும் புலவர்கள் முதன் முதலாக இயற்றினார்கள்; இவர்கள் தங்கள் நூல்களுக்கு இதிகாசப் புராணக் கதைகளையோ புனை கதைகளையோ பொருளாகக் கொள்ளாமல், தங்கள் காலத்தில் நிகழ்ந்த, நாட்டு மக்களின் மனத்தை ஈர்த்த, இரண்டு நிகழ்ச்சிகளை ஆதாரமாகக் கொண்டு இவ்விரண்டு காவியங்களை இயற்றினார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. காவிரிப்பூம்பட்டினத்தில் பெருஞ்செல்வனாக இருந்த கோவலன் தன் பெருஞ் செல்வத்தைச் செலவு செய்து வறுமை யடைந்து தன் மனைவியாகிய கண்ணகியுடன் மதுரைக்குச் சென்று, வாணிகஞ் செய்து பொருள் ஈட்ட முயன்றான். அவன் தன் மனைவியின் காற் சிலம்பை விற்கச் சென்றபோது களவுக் குற்றஞ் சாற்றிக் கொல்லப் பட்டான். அவன் மனைவி கண்ணகி பாண்டியனிடஞ் சென்று, தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை நிறுவினாள். பாண்டியன் நீதி தவறி, நல்லவன் ஒருவனை அநியாயமாகக் கொலை செய்ததற்காக, ஆத்திரங் கொண்ட நகர மக்கள் அவனுடைய அரண்மனைக்குத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். பிறகு, கண்ணகி வாழ்க்கையை வெறுத்துப் பட்டினியுடன் பதினான்கு நாட்கள் வழி நடந்து கடைசியில் ஒரு வேங்கைமர நிழலில் இருந்து உயிர்விட்டாள். பத்தினியாகிய கண்ணகியாருக்குச் சேரன் செங்குட்டுவன் கோட்டம் அமைத்துச் சிறப்புச் செய்தான். இந்நிகழ்ச்சியை ஆதாரமாகக் கொண்டு சிலப்பதிகாரக் காவியம் இயற்றப்பட்டது. மற்றொரு நிகழ்ச்சி மணிமேகலையின் துறவு. கோவலனுக்கும் புகழ்பெற்ற நாடகக் கணிகையாகிய மாதவிக்கும் பிறந்த மகள் மணி மேகலை. அவள் மங்கைப் பருவமடைந்த போது அவளைக் காதற் கிழத்தியாகப் பெறச் சோழ அரசன் மகனான உதயகுமரன் விரும்பினான். இந்தக் காதல் முயற்சியில் அவ்விளவரசன் தற் செயலாகக் கொலை செய்யப்பட்டு இறந்தான். பிறகு மணிமேகலை வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டு பௌத்த மதத்தை மேற் கொண்டு துறவு பூண்டு, அறச்செயல்களைச் செய்துகொண்டிருந் தாள். பிறகு காஞ்சீபுரத்தில் வீடுபேறடைந்தாள். இந்நிகழ்ச்சியை ஆதாரமாகக் கொண்டு இயற்றப்பட்டது மணிமேகலை என்னும் காவியம். |