பக்கம் எண் :

246மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

அநியாயமாகக் கொல்லப்பட்டான் என்பதை அரசனுக்கும் உலகத்துக் கும் காட்டவேண்டிய பொறுப்பு தன்மேல் இருப்பதை உணர்ந்தாள். தன் கணவனுடைய மானம் மரியாதைகளைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு - கடமை - தன் ஒருத்தி மேல் மட்டும் இருப்பதை உணர்ந்தாள். அக்கடமையைச் செய்ய வீறிட்டெழுந்தாள். உண்மையுள்ள இடத்தில் வீரம் பொலியுமன்றோ? நாட்டு மக்களை விளித்து அறை கூவினாள். இந்த நகரத்தில் நற்குடிப் பெண்டிர் இல்லையா? பிள்ளைகளைப் பெற்றெடுத்த சான்றோர் இல்லையா? தெய்வம் இல்லையா? நீதி நியாயம் இல்லையா? என்று முறையிட்டாள். இதைக் கேட்ட நகர மக்கள் நீதிமுறை தவறிவிட்டதை யுணர்ந்தார்கள். அரசன் தவறாக, அநீதியாக நல்லவன் ஒருவனைக் கொன்றுவிட்டான் என்பதை யுணர்ந்தார்கள். நகரத்தில் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், இதன் உண்மையை அவர்களால் நிச்சயமாக அறிய முடியவில்லை. அவர்களுடைய அனுதாபமும் நல்லெண்ணமும் கண்ணகிபால் சாய்ந்தது. ஆனால், உண்மை யாது? தவறு யாருடையது? என்று அறியாமல் அவர்கள் மனம் ஊசலாடியது.

கண்ணகியார் அரண்மனைக்குச் சென்று அரசன் முன்பு தன் வழக்கை எடுத்துரைத்தார். அரசன் தான் தன் கடமையைச் செய்ததாகக் கூறினான். ‘கள்ளனைக் கொல்வது கொடுங்கோல் அன்று, அரசருடைய கடமை. அதன்படியே நான் செய்தேன்’ என்று கூறினான். ‘இல்லை, என் கணவன் களவு செய்யவில்லை’ என்று வாதாடினாள் கண்ணகி. பாண்டியன், தன் அரசியின் சிலம்பில் முத்துக்கள் பரலாக இருந்தன என்றான். கண்ணகி, தன் சிலம்பில் மாணிக்கக் கற்கள் பரலாக இருந்தன என்றாள். சான்று காண்பதற்காகக் கண்ணகியின் சிலம்பு அவைக்குக் கொண்டு வரப்பட்டது. அதை உடைத்தபோது அதனுள்ளிருந்து மாணிக்கப் பரல்கள் வெளியே விழுந்தன. ஆம்! இது கண்ணகியின் காற்சிலம்புதான். பாண்டி மாதேவியின் சிலம்பு அன்று என்பது நிறுவப்பட்டது.

அரசன் திடுக்கிட்டான். தான் பெரிய தவறு செய்து விட்டதை உணர்ந்தான். அவன் மனம் என்ன பாடுபட்டது! பாண்டியன், ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன், நீதிமான்; செங்கோல் வேந்தன்; கல்வி கற்ற புலவன்; ‘உற்றுழியுதவியும் உறுபொருள் கொடுத்தும்’ என்று தொடங்கும் புறநானூற்றுப் பாட்டைப் (புறம் 183) பாடியவன் அவன். இத்தகைய அறிஞனான பாண்டியன், தீவினைப் பயனாக, இத்தகைய