பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 247 |
பெரிய தவறு செய்துவிட்டதையறிந்தபோது அவன் மனம் துடித்தது. அறிவு கலங்கியது. இருதயந் துடித்து அவன் சிம்மாசனத்தில் இருந்த படியே உயிர்விட்டான். அரசன் அநீதி செய்தான், கண்ணகியின் கணவன் கள்ளன் அல்லன் என்னும் செய்தி தெரிந்தவுடன் நகர மக்களின் உணர்ச்சி ஆவேசமாக மாறிவிட்டது. அவர்களில் சிலர் அரண்மனையைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டனர். அரண்மனை தீயினால் எரிந்தது. இடைக்குல மூதாட்டி தன் வீட்டில் வந்திருந்த கோவலன் கொலை செய்யப்பட்டதையும் கண்ணகியின் துன்பத்தையும் அரசன் மனம் துடித்து இறந்ததையும் அறிந்து தீராத் துயரம் அடைந்தாள். அன்புள்ளம் படைத்த அம்மூதாட்டியினால் இத் துயரங்களைத் தாங்க முடியவில்லை. அவள் ஓடோடியுஞ் சென்று அரண்மனை எரிந்து கொண்டிருக்கிற தீயில் விழுந்து மாய்ந்து போனாள். கண்ணகியார் தன் துயரம் ஆற்றாமல், கொற்றவைக் கோயிலின் முன்னே போய்த் தன் கைவளைகளை யுடைத்துவிட்டு வைகைக் கரைவழியே நடந்தார். (அக்காலத்துப் பெண்கள் கைம்மை யடைந்தால், கைவளைகளை உடைத்து விடுவது வழக்கம்). நடந்த கண்ணகியார் உணவும் நீரும் கொள்ளாமலும் ஓரிடத்தில் தங்காமலும் நெடுக நடந்தார். பதினான்கு நாட்களுக்குப் பிறகு ஒரு குன்றின்மேல் வேங்கை மரத்தின் கீழ் வந்து தங்கினார். அப்போது அவர் உயிர் அவர் உடலைவிட்டுப் பிரிந்தது. கோவலன் கொலை செய்யப்பட்டதும், அரசன் இறந்ததும், அரண்மனை தீயிடப்பட்டதும் மாதரி அத்தீயில் விழுந்து இறந்ததும் ஆகிய துன்பச் செய்திகளைக் கேட்ட கவுந்தியடிகள் ஜைன சமயத்தவராதலின், கல்லேகனை நோன்பு (உண்ணாவிரதம்) இருந்து உயிர்விட்டார். கோவலன் மதுரையில் கொலையுண்டதும் கண்ணகி துன்புற்றதும் ஆகிய செய்திகளைக் கேட்ட கோவலன் தாய் துயரம் பொறுக்காமல் இறந்துபோனாள். அவன் தந்தையான மாசாத்துவான் தன் செல்வங்களைத் தானம் செய்துவிட்டுப் பௌத்த மதத்தை மேற் கொண்டு துறவு பூண்டான். கண்ணகியின் தாய், தன் மகளுக்கும் மருமகனுக்கும் நேரிட்ட தீராத் துயரத்தைக் கேட்டுத் தானும் துன்பம் தாங்க முடியாமல் உயிர்விட்டாள். அவள் தந்தையான மாநாய்கனும் துயரம் தாங்காமல் தன் செல்வங்களையெல்லாம் தான தருமம் செய்து ஆசீவகமத்துத் துறவியானான். மாதவியும் கோவலன் கண்ணகியரின் |