பக்கம் எண் :

248மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

துன்பத்தைக் கேட்டு நாடகத் தொழிலைவிட்டுப் பௌத்த மதத்தைச் சேர்ந்து தவம் செய்தாள். இவ்வாறு அவலச் சுவைச் செய்தியுள்ளது இந்நிகழ்ச்சி. சேரன் செங்குட்டுவன், கண்ணகியின் செய்தியையறிந்து பத்தினி யாகிய அவருக்குக் கோட்டம் அமைத்துச் சிறப்புச் செய்தான்.

இந்த நிகழ்ச்சிகளைக் கொண்டு இளங்கோவடிகள் சிலப்பதி காரம் என்னும் இச்சிறந்த காவியத்தை இயற்றினார். இளங்கோ அடிகள் இதை இயற்றுவதற்கு முக்கியக் காரணமும் உண்டு. இக்காவியத் தலைவராகிய கோவலனும் கண்ணகியும் சமண சமயத்தவர். சமண சமயத்தவரான இளங்கோ அடிகள் தம் சமயத்தைச் சேர்ந்த இவர்களின் வரலாற்றை யமைத்து இக் காவியத்தை இயற்றினார். அன்றியும், நல்வினை, தீவினை என்னும் ஊழின்படி உயிர்கள் நன்மை தீமையடைகின்றன என்னும் சமண சமயக் கொள்கையை வற்புறுத்து வதற்கு இந்நிகழ்ச்சிகள் உதவியாக இருக்கின்றன. மற்றொரு காரணம்,

அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதும்
உரைசால் பத்தினிக் குயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதுஉம்.

ஆகிய செய்திகளைக் கூறுவதற்கு இக்காவியம் இயற்றப் பட்டது.

காவியக் கற்பனை

காவிய நூல் சிறப்பாக அமைய வேண்டுமானால் அதில் கற்பனைகளும் உவமைகளும் வர்ணனையும் மெய்ப்பாட்டுச் சுவை களும் பெரிதும் இடம்பெற வேண்டும். இவையெல்லாம் இக்காவியத் தில் இடம்பெற்று அழகுடன் மிளிர்கின்றன. இது வெறுங் காவியம் மட்டும் அன்று, இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் இலக்கியமும் ஆகும்.

சரித்திர நிகழ்ச்சியாக இருந்தாலும் கதையாக இருந்தாலும் அவை காவிய நிலையை யடையும்போது அதில் கற்பனைகள் இடம் பெறாவிட்டால் காவியத் தன்மை யடையாது. அந்த முறைப்படி இளங்கோ அடிகள் இக்காவியத்தில் கற்பனைகளைப் புகுத்தியிருக் கிறார். உதாரணமாகச் சிலவற்றை எடுத்துக் காட்டுவோம்.