பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்255

கிடைத்த அமுதசுரபி என்னும் அருமையான பாத்திரத் தைப் பெற்று அதனை எடுத்துக் கொண்டு மீண்டும் காவிரிப் பூம்பட்டினம் வந்து தன் அன்னையைக் கண்டு வணங்கித் தன் செய்திகளையெல்லாம் கூறினாள். பிறகு, மணிமேகலை தன் தாயுடனும் சுதமதியுடனும் அறவண அடிகள் இருந்த பௌத்தப் பள்ளிக்குச் சென்று அவரை வணங்கித் தான் மணிபல்லவஞ் சென்று பாதபீடிகையை வணங்கி யதும் அங்கு அமுதசுரபி பாத்திரங் கிடைத்தும் ஆகிய செய்திகளைக் கூறினாள். அறவண அடிகள் அப்பாத்திரத்தின் பழைய செய்திகளைக் கூறி அப்பாத் திரத்தைக் கொண்டு நகரக் குடிமக்களிடத்தில் பிச்சை ஏற்று, ஏழை எளியவருக்கும் உணவு கொடுக்கும்படி ஆசி கூறினார். அதன்படியே மணிமேகலை பிச்சை ஏற்று வந்து உலகவறவி என்னும் இடத்தில் இருந்த குருடர், முடவர், வறுமையாளர் முதலியவருக்கும் உணவு கொடுத்து வந்தாள். இதனை யறிந்த நகரத்தார் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

காவிரிப்பூம்பட்டினத்தில் காயசண்டிகை என்னும் ஏழைப்பெண் ஒருத்தி நோயினால் வருந்திக் கொண்டு பிச்சை ஏற்றுப் பிழைத்து வந்தாள். அவள் வடநாட்டிலிருந்து வந்த பெண். அவளுடைய கணவன் எப்போ தாவது ஆண்டுக்கொரு முறை காவிரிப்பூம் பட்டினம் வந்து அவளைப் பார்த்துவிட்டுப் போவாள். காய சண்டிகை உருவத்திலும் உடல் அமைப்பிலும் மணிமேகலையைப் போலவே இருந்தாள். ஆனால், சற்றுக் கருநிறம் உடையவள். அக்காயசண்டிகை, மணிமேகலையிடம் நாள்தோறும் உணவு பெற்று அருந்திக் கொண்டிருந்தாள்.

சித்திராபதி தன் பேர்த்தி மணிமேகலை பௌத்தப் பள்ளி யில் ஏழை மக்களுக்கு உணவு கொடுத்து வருவதை அறிந்து, அவளை எப்படியாவது கணிகையர் தொழிலில் புகுத்த எண்ணி, அரண் மனைக்குச் சென்று உதயகுமரனைக் கண்டு, மணி மேகலையைத் தன்வசப்படுத்திக் கொள்ளும்படி தூண்டினாள். வாசந்தவை யம்மையார் அவனுக்கு அறிவுரை கூறியதிலிருந்து ஒருவாறு மணி மேகலையை மறந்திருந்த உதயகுமரனுக்குச் சித்திராபதி கூறியது ஊக்கம் அளித்தது. வாலிபனாகிய அவன் உள்ளம், மீண்டும் மணி மேகலையைப் பெற அவாவிற்று. அவன் ஒரு நாள் உலகவறவிக்குச் சென்று ஏழை மக்களுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்த மணி மேகலையிடஞ் சென்று அவளிடம் காதல் உரையாடினான். மணி மேகலை அவன் செயலைக் கண்டித்து அவனுக்கு அறவுரை