பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 257 |
மணிமேகலை வழக்கம்போல உலகவறவிக்கு அருகில் இருந்த சம்பாபதி கோவிலில் அன்றிரவு தங்கியிருந்தாள். ஊர் துஞ்சும் நள்ளிரவு. அப்போது ஓர் உருவம் இருட்டில் அங்கு வருவது தெரிந்தது. அவ்வுருவம் சம்பாபதிக் கோவிலில் நுழைந்தது. மங்கலாக எரிந்துகொண்டிருந்த கோவில் விளக்கு வெளிச்சத்தில் வந்த உருவம் உதயகுமாரன் என்பது தெரிந்தது. அவன் அறியாமல் இருட்டில் வேறு ஓர் உருவம் அவனைப் பின் தொடர்ந்து வந்தது. பின் தொடர்ந்து வந்த உருவம் காயசண்டிகையின் கணவன். அவன் தன் கையிலிருந்த வாளை ஓங்கி உதயகுமாரனை வெட்டினான். ஓ என்ற கூச்சலுடன் உதயணகுமாரன் தரையில் விழுந்தான். வெட்டினவன் அவ்விடத்தை விட்டு இருட்டில் மறைந்து போனான். மணிமேகலை, ஓ என்று எழுப்பிய கூச்சலைக் கேட்டுக் கோவிலிருந்து வெளிவந்தாள். அப்போது ஒரு குரல், கண்டிப்பான ஒலியில் ‘நில், போகாதே’ என்று கூறியது. அவள் அச்சத்தினாலும் மனக்குழப்பத்தினாலும் ஒன்றும் செய்ய முடியாமல் பேசவும் வாய்வராமல் நடுங்கினாள். பொழுது விடிந்தது. சம்பாபதியை வணங்குவதற்குக் காலையில் கோவிலுக்கு வந்தவர்கள் உதயகுமாரன் இரத்த வெள்ளத்தில் விழுந்து இறந்துகிடப்பதையும் அருகில் இரத்தக் கறையுடன் வாள் கிடப் பதையும் கண்டார்கள். இச்செய்தி நகரம் முழுவதும் பரவியது. சம்பாபதி கோவில் பௌத்தக் கோவிலாகை யால் பௌத்த பிக்ஷுக்கள் வந்து பார்த்து அரசனிடஞ் சென்று செய்தியைக் கூறினார்கள். உதய குமாரனை வெட்டியவன் யார் என்பது தெரியாமற் போனாலும் அரச குமாரன் செய்தது தகாத செயல் என்பது மட்டும் விளக்கமாகத் தெரிந்தது. அரசன், நடந்த நிகழ்ச்சியை ஆய்ந்தறிந்து, இறந்த மகனை அடக்கஞ் செய்யும் படியும், மணிமேகலைக்கு மக்கள் துன்பஞ் செய்யாதபடி அவளைக் காவலில் வைக்கவும் கட்டளையிட்டான். இராசமாதேவி தன் மகனான உதயகுமாரன் இறந்ததற்குக் காரணமாக இருந்தவள் மணிமேகலையே என்று கருதி அவளைப் பழிவாங்கவேண்டுமென்று எண்ணினாள். சில நாட்களுக்குப் பிறகு அரசி, மணிமேகலையைத் தன்னிடம் ஒப்பிக்கும்படி அரசனைக் கேட்டாள். அரசன் அவளை அரசியினிடம் அனுப்பி னான். அரசி அவளிடம் அன்புள்ளவள் போல நடித்து அவளுக்குத் தீங்குகளைச் செய்தாள். ஆனால், மணிமேகலை, அரசி செய்த பெரிய தீங்கிலிருந்து தப்பினாள். |