258 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
மணிமேகலை, சோழமாதேவியின் பாதுகாப்பிலிருப்பதை யறிந்து பாட்டியாகிய சித்திராபதி அவளைத் தன்னிடம் மீட்டுக் கொள்ள எண்ணி மணிமேகலையைத் தன்னிடஞ் சேர்ப்பிக்கும்படி அரசியைக் கேட்டாள். இதனை யறிந்த மாதவி திடுக்கிட்டு வருந்தினாள். தன் மகள் மணிமேகலை சித்திராபதி யிடஞ் சென்றால் அவளை அவள் கணிகைத் தொழிலுக்குப் பழக்கிடுவாள்; ஆகவே அவளைச் சித்திராபதியிடஞ் செல்லாமல் மீட்டுக் கொள்ள வேண்டும்; அவளை மீட்டுக் கொடுப்பதற்கு அறவண அடிகள் ஒருவரால்தான் முடியும் என்று கருதிய மாதவி, சுதமதியுடன் அறவண அடிகளிடம் சென்று வணங்கிச் செய்தியைத் தெரிவித்தாள். உடனே அடிகள் புறப்பட்டு அரண்மனைக்கு வந்தார். இராசமாதேவியார் அடிகளை வணங்கி ஆசனத்தில் இருத்தினார். அறவண அடிகள், மணிமேகலையை மாதவியிடம் அனுப்பும் படி அரசியிடங் கூறினார். அப்பெரியவரின் வார்த் தையை மறுக்காமல் இராசமாதேவியார் அவ்விதமே அவளை மாதவியுடன் அனுப்பினார். அரசகுமாரனின் கொலைக்குக் காரணமாக இருந்தவள் என்று மணிமேகலைமேல் நாட்டு மக்கள் பழிச்சொல் கூறினார்கள். ஆகவே, அவளை வெளியூருக்குச் சில காலம் அனுப்பிவைப்பதென்று தீர்மானித்து, பௌத்த மதம் பரவியிருந்த சாவகத்தீவுக்குப் போய்ச் சிலகாலம் இருந்து பிறகு திரும்பிவருமாறு ஏற்பாடு செய்து அவளைச் சாவகத்தீவுக்கு அனுப்பினார்கள். அக்காலத்தில் காவிரிப்பூம் பட்டினத்துக்கும் சாவகத்தீவுக்கும் கப்பல் வாணிகம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. தமிழ்நாட்டிலிருந்து வாணிகக் கப்பல்கள் அடிக்கடி சாவகநாடு சென்று வந்தன. அக்கப்பல்கள் ஒன்றில் மணிமேகலை சாவகம் சென்றாள். சில காலத்துக்குப் பிறகு காவிரிப்பூம்பட்டினத்தில் புயல் அடித்து அப்பட்டினம் வெள்ளத்தில் மூழ்கியது. கடல் கொந்தளிப்பும் காற்று மழையும் ஏற்பட்டுக் காவிரியாற்றில் வெள்ளம் புரண்டு வந்து நகரத்தில் புகுந்தது. நகர மக்கள் உயிர் தப்பி ஓடினார்கள். சோழ அரசன் குடும்பத்துடன் உறையூருக்குப் போய்விட்டான். அறவணவடிகளும் மாதவி, சுதமதி முதலியவர் களுடன் காஞ்சிபுரத்துக்குப் போய்விட்டார். நகர மக்கள் வெவ் வேறிடங்களுக்குப் போனார்கள். |