பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்259

சாவகத்தீவுக்குப் போன மணிமேகலை அங்கு வீடுகள் தோறும் பிச்சை ஏற்று ஏழை எளியவர்களுக்கு உணவு கொடுத்துப் பௌத்த மதப் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தாள். சில காலங் கழித்து மணிமேகலை மீண்டும் காவிரிப்பூம்பட்டினத்துக்குத் திரும்பிவந்தாள். வரும் வழியில் கப்பல் மணிபல்லவத்தில் தங்கியது. அங்குக் காவிரிப்பூம்பட்டினம் வெள்ளத்தில் முழுகியதையும் அறவண அடிகளும் மாதவியும் அந்நகரத்தை விட்டுப் போய் விட்டதையும் சேர நாட்டு வஞ்சிமா நகரத்தில் சேர அரசன் கண்ணகிக்குக் கோட்டம் அமைத்ததையும் கேள்விப்பட்டாள். ஆகவே, அவள் அங்கிருந்து வஞ்சிமா நகரஞ் சென்றாள்.

வஞ்சிமா நகரஞ் சென்று மணிமேகலை, கண்ணகியின் கோட்டத்துக்குச் சென்று வணங்கினாள். பிறகு கோவலன் தந்தையான மாசாத்துவான் பௌத்தப் பிக்குவாய் இருப்பதைத் தற்செயலாகக் கண்டு அவரை வணங்கினாhள். அவர், அறவண அடிகளும் மாதவியும் காஞ்சீபுரத்தில் இருப்பதைக் கூறினார். மணிமேகலை வஞ்சிமா நகரத்தில் இருந்த பல சமயவாதிகளையும் கண்டு அவர்களிடம் அந்தந்தச் சமயங்களின் கொள்கைகளைக் கேட்டறிந்தாள். பிறகு, அங்கிருந்து காஞ்சீபுரம் வந்து அறவண அடிகளையும் மாதவியையும் வணங்கி, அவர்களுடன் தங்கியிருந்து சமய ஊழியமும் மக்களுக்குத் தொண்டும் செய்து கொண் டிருந்தாள். இதுதான் மணிமேகலையின் வரலாற்றுச் செய்தி.

மணிமேகலை (நூல்)

இந்த நிகழ்ச்சிகளைக் கொண்டு கூலவாணிகன் சாத்தனார் மணிமேகலை என்னும் காவியத்தை இயற்றினார். பௌத்த மதச் சார்பான இந்த நிகழ்ச்சிகள் பௌத்தராகிய இவருக்கு உகந்ததாக இருந்தன. ஆகவே, பௌத்த மதக் கொள்கைகளை இந்த வரலாற்று நிகழ்ச்சிகளுடன் இணைத்துப் பௌத்த மதக் கற்பனைகளையும் பொருத்திப் புகுத்தியிருக்கிறார். அதனோடு, பௌத்த மதப் பிரசாரத்துக் காகவும் இந்நூலைப் பயன்படுத்திக் கொண்டார். பௌத்த மதக் கொள்கைகளை அந்தந்த நாட்டுத் தாய்மொழியில் எல்லோருக்கும் விளங்கும்படி எளிதாகக் கூற வேண்டும் என்பது பகவன் புத்தருடைய கட்டளை. பௌத்த மதத்தார் இக்கட்டளையைப் பொன்னே போலப் போற்றினார்கள். இந்தக் கட்டளையைப் பின்பற்றித்தான் சாத்தனாரும்