260 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
இக்காவியத்தை எளிய நடையில் எல்லோருக்கும் விளங்கும் படியாகவும் அதே சமயத்தில் மதப் பிரசாரத்தின் பொருட்டும் இயற்றினார். சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள் அக்காவியத்தைக் கலைக்காகவே, கலைஞருக்காகவே இயற்றினார். மணிமேகலையை இயற்றிய சாத்தனார் இக்காவியத்தைப் பௌத்த மதப் பிரசாரத்துக் காகவே இயற்றினார். இவைதான் சிலப்பதிகாரத்துக்கும் மணி மேகலைக்கும் உள்ள வேறுபாடுகள். மேலும், சாத்தனார் தமிழ் மொழியை மட்டுங் கற்றவரல்லர். அக்காலத்து பௌத்த மத வழக்கப்படி பௌத்த மதத்தின் ‘தெய்வ மொழி’யாகிய பாலி மொழியை நன்கு கற்றவர். வட மொழியையும் அறிந்தவர். பௌத்த மதத்தை மேற்கொண்டிருந்தவர். இந்தச் சூழ்நிலைகள் எல்லாம் இவர் இயற்றிய மணிமேகலையில் இடம் பெற்றுள்ளன. பாலி, வடமொழிகளைக் கற்றிருந்த படியால், பிராகிருத மொழிச் சொற்களையும் வடமொழிச் சொற்களையும் பௌத்த மதச் சம்பிரதாயச் சொற்களையும் அவர் இந்நூலில் வழங்கும்படி செய்துவிட்டார். அதே சமயத்தில் பிரச்சார நோக்கத்தோடு பண்டித நடையை மேற்கொள்ளாமல் எளிய நடையைக் கையாண்டார். இளங்கோ அடிகளும் தாம் மேற்கொண்ட சமண சமயத்துக்கு ஏற்ப பிராகிருத பாஷையையும் வட மொழியையும் கற்றவராக இருந்தும், கலையின் பொருட்டே சிலப்பதிகாரக் காவியத்தை இயற்றிய படியால், அவருடைய நூலில் அதிகமாகப் பிராகிருத, வடமொழிச் சொற்கள் காணப்படவில்லை. ஆனால், அக்காலத்து ஏனைய தமிழ் நூல்களைவிட இவர் நூலில் அதிக பிராகிருத, வடமொழிச் சொற்கள் அமைந்து இருக்கின்றன. பௌத்த மதப் பிக்குகளும் சமண சமயத் துறவிகளும் தங்கள் தவ வலிமையினால் சித்தி (ரித்தி) பெற்று, தாங்கள் நினைக்கிற இடங் களுக்கு ஆகாய வழியாகப் பறந்து போனதாக அந்த மத நூல்கள் கூறுகின்றன. இது அந்த மதங்களின் நம்பிக்கைகளில் ஒன்று. பௌத்த மத, சமண மத நூல்களில் இவைகளைக் காணலாம். இந்தக் கருத்தைச் சமண, பௌத்த சமயத்தவராகிய இளங்கோ அடிகளும் சாத்தனாரும் தங்கள் காவியங்களில் புகுத்தியிருக்கிறார்கள். சமண முனிவராகிய சாரணர்களும் பௌத்தத் துறவிகளாகிய தேரர்களும் ஆகாய வழியில் |