பக்கம் எண் :

276மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

இருக்கிற சையகிரிமலைகள் ஆகிய மேற்குத் தொடர்ச்சி மலைகளைக் கடக்க வேண்டியிருந்தது என்பதும், ஆகவே அவர்கள் அந்த மலை மேலே வழியுண்டாக்கிக் கொண்டு போனார்கள் என்பதும் விளக்கப்பட்டன.

சேரலாதன் அளித்த பெருஞ்சோறு - 1*

“மண் திணிந்த நிலனும்” என்று தொடங்குகிற புறநானூற்று இரண்டாவது செய்யுள், சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர் பாடியது. உதியன் சேரலாதன் சேனைக்குச் சோறு கொடுத்தது பற்றிப் பெருஞ்சோற்று உதியன் என்ற சிறப்புப் பெயர் பெற்றான். பாண்டவர் கௌரவர் இருவருக்கும் நடந்த பாரதப் போரிலே இருதரத்துச் சேனைகளுக்கும் போர் முடிகிற வரையில் இந்தச் சேரன் சோறு கொடுத்தான் என்று பழைய உரையாசிரியர் இந்தச் செய்யுளுக்கு உரை எழுதியுள்ளார். ஆகவே, உதியன் சேர லாதன் பாரதப் போர் நடந்த காலத்திலே இருந்தவன் என்று பலரும் நம்புகிறார்கள். எனவே, இந்தச் செய்யுள் மிகப் பழமையானது என்று கருதுகிறார்கள். பாரதப் போர் கி. மு. 1500-ல் இற்றைக்கு 3500 ஆண்டு களுக்கு முன்னர் நிகழ்ந்தது என்பது வரலாற்றறிஞர்களின் கருத்து. இதனால், பெருஞ்சோற்று உதியன் சேரலாதனும், அவனைப் பாடிய முரஞ்சியூர் முடிநாக ராயரும் பாரதப்போர் நடந்த காலத்தில் இருந்தவர் என்று கருதப்படுகின்றனர்.

இதைப் பற்றி இங்கு ஆராய்வோம். இந்தச் சேர அரசனும் புலவர் பெருமானும் பாரதப் போர் நிகழ்ந்த காலத்தில் இருந்தார்களா? பாரதப் போரிலே இருதரத்துச் சேனைகளுக்கும் சேரன் சோறு அளித்தானா? தலைச்சங்க இடைச்சங்க காலத்து நூல்கள் எல்லாம் மறைந்துபோக, பாரதப்போர்க் காலத்திய (?) இந்தச் செய்யுள் மட்டும் எப்படிக் கிடைத்திருக்கிறது? இந்தச் செய்யுளில் கூறப்படுகின்ற செய்தி, இதன் உரையாசிரியர் கூறுவது போல, பாரதப் போரைப் பற்றிய செய்திதானா? இதில் ஏதேனும் தவறு உண்டா?

இந்தச் செய்யுளையும் உரையையும் படித்த சிலர், இது பாரதப் போர்க்காலத்தில் நிகழ்ந்ததாகப் புனைந்துரைக்கப்பட்ட போலிப்பாடல் என்றும் கருதுகிறார்கள். ஆகவே, இச்செய்யுளைப் பற்றி ஆராய்ந்து உண்மை காணவேண்டுவது அவசியமாகிறது.


தமிழ்பொழில்: துணர் 36. மலர் 4. (1959, 60, 61)