| பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 277 |
“மண்திணிந்த நிலனும்” என்று தொடங்குகிற இந்தச் செய்யுளிலே, இவ்வரலாற்றினைக் கூறுகிற பகுதி இது: “வான வரம்பனை நீயோ பெரும! வலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழிய பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!” பழைய உரைகாரர் இதற்கு இவ்வாறு உரை எழுதுகிறார்:- “வானவரம்ப, பெரும, நீ, அசைந்த தலையாட்டமணிந்த குதிரையையுடைய பாண்டவ ரைவருடனே சினந்து நிலத்தைத் தம்மிடத்தே கொண்ட பொற்பூந் தும்பையையுடைய துரியோ தனன் முதலாகிய நூற்றுவரும் பொருது போர்க்களத்தின்கட் படுந் துணையும் பெருஞ்சோறாகிய மிக்க உணவை இருபடைக்கும் வரையாது வழங்கினோய்!” இந்தச் செய்யுளில் வரும் ஐவர், ஈரைம்பதின்மர் என்னும் சொற்கள் உரையாசிரியரை மயக்கிவிட்டன. ஆகையினால் ஐவர் என்பதற்குப் பாண்டவர் என்றும், ஈரைம்பதின்மர் என்பதற்குக் கௌரவ ராகிய துரியோதனாதியர் என்றும் பொருள் எழுதிச் சேரலாதனைப் பாரதப் போருடன் பொருத்திவிட்டார். உரையாசிரியரை மயக்கியது போலவே ஏனையோரையும் மயங்கச் செய்வது இச்செய்யுளில் உள்ள ஐவர், ஈரைம்பதின்மர் என்னும் சொற்கள். இச் சொற்களின் உண்மைப் பொருளை உணர்வோமானால், பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் பாரதப் போர் நடந்த காலத்தில் இருந்தவன் அல்லன் என்பதும், அவன் கடைச்சங்க காலத்தில் கி. பி முதலாவது அல்லது இரண்டாவது நூற்றாண்டில் இருந்தவன் என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனிபோலத் தெரியும். இதனை விளக்கிக் கூறுவோம். இச் செய்யுளில் ஐவர் என்றது பாண்டவரை அல்ல, பாண்டியரை ஆகும். பாண்டவர் ஐவர் ஆனது போலவே, பாண்டியரும் ஐவர் ஆவர். பாண்டவருக்குப் பஞ்சபாண்டவர் என்னும் பெயர் வழங்குவது போல, பாண்டியருக்குப் பஞ்சபாண்டியர் என்னும் பெயர் வழங்கியது. பாண்டவர் வேறு, பாண்டியர்வேறு, அண்ணன் தம்பியர் ஆகிய பாண்டவர் ஐவர் பாரதப்போர்க் காலத்தில் இருந்தனர். பாண்டிய அரச குலத்தைச் சேர்ந்த பாண்டியர் ஐவர், பரம்பரை பரம்பரையாகப் |