| 278 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
பாண்டிய நாட்டை நெடுங்காலம் அரசாண்டனர். பாண்டி நாட்டை ஒரே காலத்தில் ஐந்து பாண்டியர்கள் வெவ்வேறு, ஊர்களில் இருந்து அரசாண்டனர். இச்செய்தி பிற்காலத்தில் மறக்கப்பட்டு மறைந்து விட்டது. இவ்வைந்து பாண்டியரில் தலைமைப் பாண்டியன் மதுரையில் அரசாண்டான். பாண்டிய இளவரசன் கொற்கையில் இருந்து அரசாண்டான். மற்ற மூன்று பாண்டியரும் அதே சமயத்தில் வெவ் வேறிடங்களிலிருந்து அரசாண்டார்கள். மதுரைப் பாண்டியனையும், கொற்கைப் பாண்டியனையும் நூல்கள், சிறப்பாகக் கூறியது போல மற்ற மூன்று பாண்டியரைச் சிறப்பாகக் கூறவில்லை. ஆனால், பாண்டியர் ஐவர் ஒரே காலத்தில் பாண்டிய நாட்டின் ஐந்து பகுதிகளிலிருந்து அரசாண்டனர் என்பதற்கு இலக்கியச் சான்றுகளும், சாசனச் சான்று களும் உள்ளன. அந்தச் சான்றுகளை இப்போது இங்குக் காட்ட இயல வில்லை. இதுபோன்று ஒரு கட்டுரை எழுத நேரிடும் என்று எனக்குத் தெரிந்திருந்தால், நான் கண்ட அச்சான்றுகளை அவ்வப்போது குறித்து வைத்திருப்பேன். ஆனாலும், ஆராய்ச்சிக் கண்கொண்டு இலக்கியங் களையும் சாசனங்களையும் நுட்பமாக ஆராய்கிறவர், பாண்டியர் ஐவர் என்னும் உண்மையைக் காண்பார்கள். பாண்டியர் ஐவர் ஆனபடி யினாலே அவருக்குப் பஞ்சவர் என்ற பெயரும் இருந்தது. பாண்டியர் ஐவர் என்னும் சரித்திர உண்மை மறைந்து போன பிற்காலத்திலே பஞ்சவர், பாண்டவர் என்பதற்கு வேறுபாடு தெரியாமல் பாண்டியரையும், பாண்டவரையும் ஒருவராகக் கருதி மயங்கினார்கள். மயங்கியதோடு அல்லாமல், பாண்டியருக்கும் பாண்டவருக்கும் உறவு முறையும் கற்பித்துவிட்டார்கள் சேர சோழ பாண்டியராகிய முடிமன்னர் மூவரும் மறைந்து, தமிழ்நாடு வேற்றார்கள் ஆட்சியிலே சில நூற்றாண்டுகளாக இருந்த காரணத்தினாலே, தமிழ்நாட்டுச் சரித்திரச் செய்திகள் பல மறைந்து விட்டதுபோலவே, ‘பாண்டியர் ஐவர் என்னும் சரித்திர உண்மையும் பிற்காலத்தில் மறைக்கப்பட்டது. (பாரதம் எல்லாக் காலத்திலும் படிக்கப்பட்டு வந்தபடியினாலே, பாண்டவர் ஐவர் என்கிற செய்தி மட்டும் குக்கிராமத்தவருக்கும் தெரிந்திருந்தது) எனவே, புறநானூற்று உரையாசிரியர் இச் செய்யுளில் பயின்றுள்ள ஐவர் என்னும் சொல்லுக்குப் பாண்டவர் என்று உரை எழுதிவிட்டார். “ஐவரோடு சினைஇ” என்பதற்குப் பாண்டியர் ஐவருடனும் சினந்து என்று பொருள் கூறவேண்டும். அதாவது உதியன் சேரலாதன் பாண்டியர் ஐவருடனும் சினங் கொண்டான் என்பது கருத்து. |