பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்279

துரியோதனன் பாண்டவர் ஐவருடனும் சினங்கொண்டான் என்பது இச்செய்யுளின் பொருள் அல்ல.

பிறகு, இச் செய்யுளில் வருகிற “ஈரைம்பதின்மர்” என்பதற்குத் துரியோதனன் முதலிய நூற்றுவர் என்று உரையாசிரியர் பொருள் எழுதியுள்ளார். ஐவரைப் பாண்டவராக்கிவிட்ட பிறகு ஈரைம்பதின் மரைத் துரியோதனனாகியர் நூற்றுவர் என்றுதானே கூறவேண்டும்? அதற்கேற்ப உரை எழுதிவிட்டார். இங்கு எனக்கு ஒரு ஐயப்பாடு உண்டு. (ஈரைம்பதின்மர் என்று இருப்பது ஈரொன்பதின்மர் (பதினெட்டுப்பேர்) என்று பாடம் இருந்திருக்கக் கூடும் என்பது எனது ஐயம். பதினெண் என்னும் பொருளுடைய ஈரொன்பதின்மர் என்னும் பாடத்தை உரை யாசிரியர் ஈரைம்பதின்மர் என்று திருத்திக் கொண்டாரோ என்று ஐயுறு கிறேன். ஈரைம்பதின்மர் என்றே வைத்துகொண்டாலும் அது துரியோத னாசியர்களைத் தான் சுட்டவேண்டும் என்பது இல்லை. நூறுபேர் அதாவது நூறுசேனைத் தலைவர்கள் என்பது பொருள். ஈரொன் பதின்மர் என்பது பாடமானால் பதினெட்டு சேனைத் தலைவர் என்று பொருள் கொள்ள வேண்டும். இந்தச் சேனைத் தலைவர்கள் பாண்டியர்கள் ஐந்து பேருக்கும் உரியவர்கள்.) எனவே,

“அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட போலம்பூந் தும்பை
ஈரைம்பதின்மரும் பொருதுகளத் தொழிய”

என்பதற்குப் பொருள் என்னவென்றால்,

‘அசைந்த தலையாட்டமணிந்த குதிரையையுடைய ஐந்து பாண்டியர்களுடனே சினங்கொண்டு, நிலத்தைத் தம்மிடத்தே கொண்ட பொற்பூந் தும்பையைச் சூடிய (பாண்டியருடைய) நூறு சேனைத் தலைவரும் (ஈரொன்பதின்மர் என்பது பாடமாயின் பதினெட்டுச் சேனைத் தலைவரும், போர்க்களத்திலே படும்படி’

என்பது பொருளாகும்.

அடுத்த அடியாகிய “பெருஞ்சோறு மிகுபதம் வரையறு கொடுத்தோய்” என்பதற்குப் பொருள் கூறுவேன். பெருஞ்சோறு என்பதற்குச் சிறப்புப் பொருள் உண்டு. அதனைத் தொல்காப்பியம் புறத்திணையியல் வஞ்சித்தினைப் பகுதியில் காணலாம். வஞ்சித் திணை என்பது ஓர் அரசன்மேல் வேற்றுநாட்டரசன் ஒருவன் படை