பக்கம் எண் :

280மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

யெடுத்து வந்தால் அவன் மேல் போருக்குச் செல்வது. இந்த வஞ்சித் திணையின் துறைகள் பதின் மூன்றில் பெருஞ்சோற்றுநிலை என்பதும் ஒன்று. எதிர்த்து வந்த அரசன்மேல் போருக்குச் செல்லும் அரசன், போருக்கு புறப்படுவதற்குமுன் சேனைவீரர்களுக்கு விருந்து செய்வான். அந்த விருந்துக்குப் பெருஞ்சோறு, அல்லது பெருஞ்சோற்று நிலை என்பது பெயர். இந்த விருந்தின்போது அரசனும் உடனிருந்து உண்பான். “பிண்டம்மேய பெருஞ்சோற்றுநிலை” என்பது தொல்காப்பிய சூத்திரம். இதற்கு உரை எழுதுகிற நச்சினார்க்கினியர், “வேந்தன் போர்த்தலைக்கொண்ட பிற்றை ஞான்று தானே போர் குறித்த படையாளருந் தானும் உடன் உண்பான் போல்வதோர் முகமன் செய்தற்குப் பிண்டித்து வைத்த உண்டியைக் கொடுத்தன் மேயின பெருஞ்சோற்று நிலையும்” என்று பொருள் கூறுகிறார். தமிழ் அரசர்கள் போருக்குச் செல்லும்போது தம்முடைய வீரர்களுக்குச் சோறு (பெருஞ்சோறு) அளிப்பது பண்டைக்காலத்து மரபு.

புறப்பொருள் வெண்பா மாலையிலும், வஞ்சிப்படலத்தில் பெருஞ்சோற்றுநிலை கூறப்படுகிறது. எனவே (இப்புறநானூற்றுச் செய்யுளில் வருகிற, “பெருஞ்சோறு மிகுபதம் வரையாது கொடுத்தோய்” என்பதற்குப் பொருள் “பெருஞ்சோறாகிய மிக்க உணவை உன் படைவீரர்களுக்கு வரையாது அளித்தோய்” என்பது ஆகும். இவ்வாறு பொருள்கொள்ளாமல் பழைய உரையாசிரியர், தாம் கற்பித்துக்கொண்ட பாண்டவர் கௌரவரின் பாரதப்போருக்கு ஏற்ப, இருபடைக்கும் உதியன் சோறு வழங்கியதாக உரை எழுதினார். இவ்வுரையை ஏற்றுக் கொள்ள முடியாது; என்னை? போருக்குச் செல்லுமுன் தன் போர்வீரர்களுக்குப் பெருஞ்சோறு கொடுப்பது தமிழ்நாட்டு மரபு. அந்த மரபுப்படி உதியன் சேரலாதன், தனது போர்வீரர்களுக்குப் பெருஞ்சோறு கொடுத்தான் என்பது பொருந்துமே தவிர, பிற அரசர் சேனைக்குப் பெருஞ்சோறு கொடுத்தான் என்பது பொருந்தாது. அது தவறான கூற்றாகும்.

அப்படியானால், இப்புறநானூற்றுச் செய்யுளின் பொருள் என்ன?

இந்தச் செய்யுளிலே வேறு சில குறிப்புகளும் உள்ளன. அந்தக் குறிப்புகளைக் கொண்டு ஆராய்ந்து இதற்குப் பொருள் காணலாம். உதியன்சேரலாதன் மேற்குக் கடற்கரையைச் சார்ந்த சேரநாட்டுக்கு அரசன். அவன், கிழக்குக்கடல் ஓரத்தில் இருந்த சோழநாட்டைப் பிடித்துக் கொண்டு, சோழநாடு, சேரநாடு இரண்டையும் அரசாண்டான்.