பக்கம் எண் :

294மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

வானவரம்பன், இமயவரம்பன்

வானவரம்பன் இமயவரம்பன் என்பதற்கு வானத்தை எல்லையாக உடையவன் இமயமலையை எல்லையாக உடையவன் என்று பொருள் கூறப்படுகிறது என்றும் இவ்வாறு பொருள் கொள்வது பொருந்தாது என்றும் என்னுடைய முதல் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். திரு. தேவநேயர் அவர்கள், இவ்வாறு பொருள் கொள்வதே சரியானது என்று கூறி அதற்குத் தமது கருத்தையும் எழுதியுள்ளார்கள். அவர் எழுதுவது:-

“வானவரம்பன் என்பது வானளாவும் மலையரசன் என்றும், இமயவரம்பன் என்பது பனிமலையை (இமயத்தை) எல்லையாகவுடைய நாட்டரசன் என்றும் பொருள் படுவதாகும். இவை சேரர் பெயர்கள். இவற்றுள் முன்னது எல்லார்க்கும் பொது; பின்னது ஒரு சிலர்க்கே சிறப்பு. நூறடி உயரமுள்ள மாடங்களும் இருநூறடி யுயரமுள்ள கோபுரங்களும், வான் றோய்வனவாகவும் வானத்தைத் துளைத்து மீச் சென்றனவாகவும் உயர்வு நவிற்சியாகக் கூறப்படும்
போது, பத்தாயிரம் அடி உயர்ந்த குடமலை ஏன் வானவரம் பென்று மீக் கூறப்பட முடியாது?”

இவ்வாறு வானவரம்பன் என்றால் வானளாவும் மலைக்கு அரசன் அதாவது குடமலைக்கு அரசன் என்று தேவநேயர் பொருள் கூறுகிறார். அப்படியானால், மலைகளையுடைய எல்லா அரசரும் வானவரம்பன் என்று பெயர் பெற வேண்டும். சோழனும், பாண்டியனும், வேறு சிற்றரசர்களும், அவர்கள் நாட்டிலும் மலைகள் இருப்பதனாலே, அவர்களும் வான வரம்பன் என்று பெயர் பெற வேண்டும் அல்லவா? ஆனால், எல்லாத் தமிழ் அரசர்களும் வானவரம்பன் என்று பெயர் பெறுவது இல்லை. சேர அரசர்களுக்கு மட்டுமே வானவரம்பன் என்னும் பெயர் வழங்கப்பட்டது. இது ஏன்? வானளாவும் மலையுடைய அரசர் யாவரேனும், தேவநேயர் கருத்துப் படி, மலையை எல்லையாக வுடையவராயிருந்தால், வானவரம்பர் என்று பெயர் பெறவேண்டும். அப்படியில்லாமல் சேர அரசர்களுக்கு மட்டுமே வானவரம்பன் என்று பெயர் கூறப்படுவது ஏன்? ஆகவே, தேவநேயர் கூறுகிறபடி உயர்வு நவிற்சியாகக் கூறப்படுவது அன்று வானவரம்பன் என்பது, இதற்குத் தகுந்த வேறு காரணம் இருக்கக்கூடும். அதனைப் பின்னர் ஆராய்வோம்.