பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 293 |
இவ்வாறு உரையாசிரியர் கூறுகிறபடியினால், மாராயம் என்பது அரசனால் அளிக்கப்படும் சிறப்புப்பெயரோ பட்டப் பெயரோ அல்ல என்பதும், அரசன் அளிக்கும் வேறு பட்டங்களையும் சிறப்புக் களையும் பரிசுகளையும் குறிக்கிற ஒரு பொதுப்பெயர் என்பதும் நன்கு விளங்குகின்றன, “ஏனாதி காவிதி பட்டங்கள்” என்று உரையாசிரியர் கூறுகிறபடியால், முதலிய என்பதில் மாராயம் என்னும் பட்டமும் அடங்காதோ என்றால், அடங்காது. முதலிய என்பது எட்டி போன்ற பட்டங்களைக் குறிக்குமே யல்லாது, மாராயம் என்பதைக் குறிக்காது. மாராயம் என்பது பட்டப்பெயர் அல்ல. நச்சினார்க்கினியர் கூறுவது போல, அரசனால் அளிக்கப்படும் பட்டப்பெயர்களுக்கும் மானியங்கள் முதலிய சிறப்புகளுக்கும் வழங்குகிற பொதுப்பெயர். சங்க நூல்களிலே ஏனாதி, காவிதி, எட்டி போன்ற சிறப்புப்பெயர்கள் (பட்டப் பெயர்கள்) காணப்படுகின்றன வேயன்றி, மாராயன் என்னும் பட்டப்பெயரை இதுவரையில் நான் கண்டது இல்லை. சங்கநூல்களில் இப்பட்டப்பெயர் வந்திருப்பதைத் திரு. தேவநேயர் காட்டுவாரானால், நன்றியுள்ளவனாக இருப்பேன். மாராயன் என்னும் பெயர்கள், சங்க காலத்துக்கு மிகமிகப் பிற்பட்ட காலத்தில் வழங்கப்பட்டவை என்பது உண்மை. இந்தப் பிற்காலச் சிறப்புப் பெயரைச் சங்க காலத்துச் சிறப்புப்பெயரென்று கருதி மயங்குவது தவறு. ஆகவே, தொல்காப்பியம் கூறுகிற மாராயம் என்னும் சொல், அரசன் பிறருக்கு வழங்குகிற பட்டப் பெயர் அல்ல என்பதும், அது அப்பட்டப் பெயர்களுக்கு வழங்கும் பொதுப் பெயர் என்பதும் தெளிவாகிறது. ஆகவே, தேவநேயர் கூறுகிறபடி ராயர் என்னும் சொல் பட்டப்பெயராகவோ சாதிப் பெயராகவோ கடைச் சங்க காலத்திலும் வழங்கவில்லை. அதற்கு முந்திய தொல்காப்பியர் காலத்திலும் வழங்கவில்லை. அதனால், முடிநாகராயர் என்பதில் ராயர் என்னும் சொல் தவறாக ஏடெழுதுவோரால் எழுதப்பட்டிருக்கக் கூடும் என்றும், முடிநாகரியர் என்றிருக்கக் கூடும் என்பதில் தவறில்லை. இப்பொழுதும் அதனையே வற்புறுத்துகிறேன். நாகரியார் என்பதோ அல்லது வேறு சொல்லோ தவறாக நாகராயர் என்று ஏடெழுதுவோரால் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. ஆனால், அச்சொல் நிச்சயமாக ராயர் என்று இருக்க முடியாது. |