பக்கம் எண் :

292மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

“ராயர் என்னும் பெயர் கடைச்சங்கத்திற்கும் முந்தி வழங்கிய தென்பதற்குத் தொல்காப்பியமே சான்றாகும். தொல்காப்பியர் காலம் கி. மு. 7-ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதாகாது. ஓர் ஆள்வினைத் துறைத் தலைவன் அரசனாற் பெறுஞ்சிறப்பு மாராயம் எனப்பட்டது. ‘மாராயம் பெற்ற நெடுமொழியாலும்’ என்பது தொல்காப்பியம். (பொருள் 63) மாராயமாவது மாராயன் என்று அரசனாற் பட்டம் பெறுகை. ‘பஞ்சவ மாராயன் ... ... கொங்காள்வான்’ எனறு கல் வெட்டில் வருதல் காண்க. அரசனாற் சிறப்பெய்திய வெற்றி மறவரின் பெற்றிமை கூறும் புறத்துறையை மாராய வஞ்சி எனப் புறப் பொருள் வெண்பா மாலை கூறும்.”

இவ்வாறு எழுதி ராயன், ராயர் என்னும் சிறப்புப் பெயர் கடைச் சங்ககாலத்திலும் அதற்கு முற்பட்ட தொல்காப்பியர் காலத்திலும் அரசனால் மற்றவருக்கு வழங்கப்பட்டது என்று கூறுகிறார். அதற்குச் சான்றாகப் ‘பஞ்சவ மாராயன் ... ... ... கொங்காள்வான்’ என்னும் பெயரைச் சாசனத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறார். இந்தச் சான்று கடைச் சங்க காலத்துக்கு மிக மிகப் பிற்பட்ட காலத்துச் சான்று. மிகப்பிற்காலச் சான்றை மிக முற்காலத்துக்குச் சான்று காட்டுவது தவறு. அது ஏற்கத் தக்கதன்று.

மேலும், தேவநேயர் கூறுவதுபோல, “மாராயன் என்று அரசனாற் பட்டம் பெறுகை” சங்ககாலத்தில் இருந்த தில்லை. சங்க காலத்தில் தமிழ் அரசர் தமது அலுவலாளருக்கோ மற்றவர்க்கோ ராயன் என்றோ மாராயன் என்றோ பட்டம் வழங்கியது இல்லை. தொல்காப்பியம் கூறுகிற மாராயம் என்னும் சொல் பட்டப்பெயர் அல்ல. அரசன் பிறருக்கு வழங்குகிற ஏனைய பட்டப்பெயர்களுக்கும் பரிசாக அளிக்கிற நாடுகளுக்கும் ஊர்களுக்கும் பொதுப் பெயராக மாராயம் என்னும் சொல் வழங்கப்பட்டது. இதற்கு நச்சினார்க்கினியர் உரையே சான்று பகர்கிறது. மாராயம் என்பதற்கு நச்சினார்க்கினியர் கூறும் உரைவருமாறு:-

“மாராயம் பெற்ற நெடு மொழியானும் - வேந்தனாற் சிறப் பெய்திய அதனாற்றானேயாயினும் பிறரேயாயினும் கூறும் மீக்கூற்றுச் சொல்லும். சிறப்பாவன ஏனாதி, காவிதி முதலிய பட்டங்களும் நாடும் ஊரும் முதலியனவும் பெறுதலுமாம்.”