பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்291

கட்கே” என்று இன்னும் நம்புவாரானால், அவருடைய நம்பிக்கையைத் தடுக்க எனக்கு உரிமையில்லை, தடுக்கவும் இல்லை. நான் அவருடைய கருத்தை ஏற்கவேண்டுமானால், மேலே காட்டிய முரண்பாடுகள் எல்லாவற்றிற்கும் சான்றுகளுடன் விடையிறுப் பாரானால், அக்கருத்தை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாயிருக்கிறேன்.

சுருக்கிச் சுருக்கி எழுதியும் இக்கட்டுரை விரிவடைந்து விட்டது. ஆதலின், மேலே கூறியதுபோல, பாவாணர் அவர்கள் தமது கட்டுரையில்கூறியுள்ள ஏனையவற்றிற்குத் தனியே வேறு கட்டுரை எழுதியுள்ளேன்; அதில் அவற்றைக் காண்க.

சேரலாதன் அளித்த பெருஞ்சோறு - 3

“தமிழ்ப் பொழில்” 36-ஆம் துணர், 4-ஆம் மலரில், “சேரலாதன் அளித்த பெருஞ்சோறு” என்னும் கட்டுரை ஒன்று எழுதியிருந்தேன். அதில், உதியன் சேரலாதன் பெருஞ்சோறு அளித்தது பாரதப்போரில் அல்ல என்றும், பஞ்சவராகிய ஐந்து பாண்டியருடன் போருக்குச் சென்ற அவன், தன் சொந்தப் படையினருக்குப் பெருஞ்சோறு அளித்ததை அச்செய்தி குறிக்கிறது என்றும் எழுதியிருந்தேன். அக்கருத்தை மறுத்துத் திரு. ஞா. தேவநேயர் அவர்கள், “சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் படைக்கே” என்னும் தலைப்புடன் ஒரு கட்டுரையைத் தமிழ்ப் பொழிலில் (துணர் 36, மலர் 7-இல்) எழுதியிருந்தார்கள். தேவநேயர் கட்டுரைக்கு விடையாக நான் எழுதிய, “சேரலாதன் அளித்த பெருஞ்சோறு - 2.” என்னும் கட்டுரையை வாசகர்கள் தமிழ்ப் பொழிலில் படித்திருப்பார்கள். அக்கட்டுரையில் கூறப்படாத மற்றச் செய்தியை வேறு கட்டுரையில் எழுதுவதாக அதில் குறிப்பிட்டிருந்தேன். அவற்றை இக்கட்டுரையில் எழுதுகிறேன்.

“ராயர்”

புறநானூற்று 2-ஆம் செய்யுளைப் பாடிய புலவர் பெயர் முரஞ்சியூர் முடிநாகராயர் என்றிருப்பது தவறானதென்றும், அப்பெயர் முடிநாகரியார் என்றிருக்கக்கூடும் என்றும், சங்க காலத்தில் ராயர் என்னும் பட்டப்பெயர் அல்லது சாதிப் பெயர் வழங்கவில்லை என்றும் எனது முதல் கட்டுரையில் எழுதியிருந்தேன். அதனை மறுத்து திரு. ஞா. தேவநேயர் இவ்வாறு எழுதியுள்ளார்:-