பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்305

அயல்நாட்டார் குறிப்பு

கிறித்தவ நூற்றாண்டின் தொடக்கத்தில் இயற்றப்பட்ட கிரேக்கக் கடலோடிகளின் பயணக் குறிப்பேடுகளில் தமிழ் நாட்டின் பல பகுதிகளைப்பற்றிய செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் சோழரைப்பபற்றியும், அவர்களுடைய நாட்டைப்பற்றியும், அவர் களுடைய பட்டினங்களைப் பற்றியும் புகழ்மிக்க குறிப்புகள் காணப்படுகின்றன.

சோழ மன்னரைப் பற்றிய பழங்கதைகள்

சங்க காலத்தின் பிற்பகுதியில் (கி. பி. 200 - 300) சோழ மன்னர்களைப் பற்றிய பல பழங்கதைகள் வழக்கிற்கு வந்துள்ளன. அக் கதைகள் எல்லாம் வரலாற்றுக் காலச் சோழர்களுக்கு முற்பட்ட சில மன்னர்களைச் ‘சோழர்குடியின் மூதாதையர்’ என்று அறிவிக் கின்றன. அச் சோழ அரசர்கள் தெய்வீகத் தன்மையுடைய வர்களாகவும், அற்புதச் செயல்கள் பலவற்றைப் புரிந்தவர்களாகவும் போற்றப் படுகின்றனர். இத்தகைய பழங்கதைகள் பெரிதும் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களில் பயின்று வழங்குகின்றன. எட்டுத்தொகை நூல்களுள் இவை அருகிய வழக்குடையனவாகவே உள்ளன. எனவே, இக் கதைகளைச் சோழரைப் பற்றிய பழங்கதைகள் எனக் கொள்ளுவதே பொருத்தமாகும். இக் கதை களால் அறியப்படும் சோழ மன்னர்களின் வரலாற்றைக் காண்போம்.

காந்தமன்

காந்தமன் என்னும் சோழ அரசன் காவிரி ஆற்றைச் சோழ நாட்டில் பாயச் செய்தான் என்னும் புராணக் கதையை மணிமேகலைக் காப்பியம் கூறுகிறது. காந்தமன் குடகுமலையில் இருந்த அகத்திய முனிவரிடம் சென்று, அவரை வேண்ட அவர் தம்மிடமிருந்த கமண்டலத்து நீரைக் கவிழ்த்தாராம். அந்த நீர் காவிரி ஆறாகப் பாய்ந்து சோழநாட்டில் புகுந்து வந்ததாம். இந்தக் கதையை மணிமேகலைக் காப்பியப் பதிகங் கூறுகிறது.7

சோழன் காந்தமனைப்பற்றிய இன்னொரு புராணக் கதையையும் மணிமேகலைக் காப்பியம் கூறுகிறது. காந்தமன் காலத்தில், பரசுராமன்


7. மணிமே. பதி. 9 - 12