| 304 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
தமிழகத்தைத் தொல்காப்பியர் சுட்டியுள்ளார்.1 மற்றும், சோழர் குடியின் அடையாளச் சின்னமாக ஆத்திப் பூமாலையை2 அவர் குறிப்பிட் டுள்ளார். தமிழ் இலக்கியத்துள் காலத்தால் முந்தியது தொல்காப்பியம். சற்றேறக்குறைய கி. மு. நான்காம் நூற்றாண்டு அளவில் இந் நூல் இயற்றப்பட்டிருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.3 இந்த இலக்கியச் சான்றுகளால் சோழர்குடி மிகவும் தொன்மையானது என்பது புலனாகிறது. நெடுங்காலமாக ஆட்சி செய்துவந்த அரசகுடி எனும் பொருளிலேயே ‘படைப்புக் காலந் தொட்டு’ இந்நாட்டை ஆண்டு வரும் குடி என்று நம் முனனோர்கள் போற்றியுள்ளனர்.4 வடமொழி இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் ஆகிய வற்றுள் சோழ அரச மரபைப்பற்றிச் சில குறிப்புகள் காணப்படுகின்றன. பாணினியின் இலக்கணத்திற்குக் காத்தியாயனர் உரை எழுதியுள்ளார். ஓர் இலக்கண விதிக்கு எடுத்துக் காட்டாகச் ‘சோழர்’ என்னும் பெயரை அவர் எடுத்துக் காட்டியுள்ளார்.5 அவருடைய காலம், மௌரியப் பேரரசர்க்கு முற்பட்ட நவநந்தரின் ஆட்சிக்காலம் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். அக்காலத்திலேயே (கி. மு. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதி) சோழ அரசமரபு புகழ்பூத்து விளங்கியமை இதனால் புலனாகின்றது. கல்வெட்டுச் சான்று மௌரியப் பேரரசன் அசோகனுடைய (கி. மு. 272 - 232) கல் வெட்டுகளில் தமிழக வேந்தர்களைப்பற்றிய குறிப்புகள் உள்ளன. அவற்றுள் சோழ அரசமரபே முதலாவதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.6 மௌரியப் பேரரசனுடைய ஆதிக்கத்திற்குட்படாது. தன்னுரிமைத் தனி யரசுகளாகச் சோழ, பாண்டிய, சேர அரசுகள் விளங்கியமையும் தெரியவருகிறது. இக் குறிப்புகளால் கி. மு. மூன்றாம் நூற்றாண்டு அளவிலேயே சோழப்பெருவேந்தரின் குடி, வடஇந்திய மக்களின் கருத்தைக் கவரத்தக்க நிலையில் பெருவாழ்வு பெற்றிருந்தமை தெளிவாகத் தோன்றுகிறது.
1. தொல். பொருள், செய். 75 : 3 2. ௸ புறத். 5 : 4 3. வரதராசனார், மு. ‘தமிழ் இலக்கிய வரலாறு’, பக். 5 4. குறள், 955, பரிமே. உரை 5. Mukerji, R. K. The Fundamental Unity of India, p. 54 6. Sircar, D. C. (ed.) Inscriptions of Asoka, pp. 47, 58 |