பக்கம் எண் :

332மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

செருப்பாழிப்போர்4

எழிமல்லைப் பகுதியில் பாழி என்பது ஒரு நகரம். நன்னன் இதனைத் தலைநகராகக் கொண்டு ஒரு காலத்தில் ஆண்டு வந்தான். இந்தப் பாழி நகரத்தில் வேளிர் குடியினரும் வாழ்ந்தனர். இந் நகரில் அடிக்கடி போர்மூண்டது. காரணம் இது வடநாட்டிலிருந்து மேற்குக் கடற் கரை வழியே தமிழ்நாட்டில்கிழக்கு நோக்கி நுழைவார்க்கு வாயிலாய் அமைந்திருந்ததே ஆகும். அடிக்கடி போர் நிகழ்ந்த காரணத்தால் இந்த நகரம் ‘செருப்பாழி’ (செரு நடக்கும் பாழி) என்று வழங்கப்பட்டது.5 செருப்பாழிப் பகுதியில் வழிப்பறி மிகுதியாக இருந்தது. சோழ நாட்டு வாணிகர் தரைவழியே மேலைக் கடற்கரைக்குச் சென்ற வழி இது. எனவே, இங்கு நடந்துகொண்டிருந்த வழிப்பறியைத் தடுக்கவேண்டிய பொறுப்புச் சோழனுடையதாயிற்று ( ‘குடிக் கடன்’). இந்தக் கடமையைச் செய்ய முன்வந்தான் இந்த இளஞ்சேட் சென்னி.

பாழி நகரில் செம்பை உருக்கி வார்த்த கோட்டை இருந்தது. இவன் அதனைத் தாக்கி அழித்தான். வம்ப வடுகர் அவனை எதிர்த்தனர். வம்ப வடுகர் என்பவர் வடநாட்டு வடுகர்;6 மௌரியர் தமிழ்நாட்டில் நுழைய வழியமைத்துக் கொடுத்தவர். தமிழரோடு ஒன்றுபட்டு வாழ்ந்த எருமை நாட்டு வடுகர் போன்றவர் அல்லர். ‘எருமை’ அரசன் வரலாற்றில் இவர்களைப் பற்றிக் காணலாம். சோழன் வம்ப வடுகரைத் தரையில் சாய்த்து யானைக் காலால் துவட்டினான்;7 வாட்போர் செய்து வென்றான்.8 தோற்ற வடுகர்களில் சிலர் திரும்பி ஓடிவிட்டனர்.

தென்பரதவரை அடக்கல்

தென்னாட்டுப் பரதவர் தம் வலிமையைக் காட்டிக் கலகம் செய்து வந்தனர். எனவே, இவன் தென்திசைப் போரில் ஈடுபட்டு இவர்களது கொட்டத்தை அடக்கினான்.

இவன் பகைவர் பிணங்களை நெல்லின் தாள் போல் உதறி, யானைகளை எருதுகள் போல் நடத்திப் போரடித்த காட்சி, புலவர் உள்ளத்தில் நிலைபெற்றது.9


4. புறம். 378

5. பூழி நாட்டிலிருந்த செருப்பு மலை வேறு பதிற். 21 : 23

6. புறம். 378 : 2 7. அகம். 375 : 13 - 15

8. புறம். 378 : 2

9. ௸ 370 : 15 - 16 (சிதைவு)