| பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 369 |
காயம்பட்டான் என்று குறிப்பிடப்படுவதே ஆகும். பிட்டன் வானவனின் படைத்தலைவன் என்பதைச் சேரர் வரலாற்றுப் பகுதியில் ‘வானவன்’ என்னும் தலைப்பின்கீழ்க் கண்டோம். எனவே, பிட்டன் போரிட்டபோது கருவூரில் இருந்த அரசன் மாந்தரஞ்சேரல் என்பது பெறப்படுகிறது. இந்த மாந்தரஞ்சேரல் வரலாறு, சோழர் வரலாற்று நிகழ்ச்சிகளை ஒரு நிரல்செய்து காட்டுகிறது. மாந்தரஞ்சேரல், காரியின் துணை தனக்குக் கிடைக்காமையால் சோழரை எதிர்த்துத் தாக்கிய ஒரு போரில் தோற்றான். இந்தப் போரில் இவனைத் தாக்கிய சோழ அரசன் பெருநற்கிள்ளி (இராசசூயம் வேட்டவன்). கிள்ளிவளவன் - 1 (குளமுற்றத்துத் துஞ்சியவன்). கருவூரைத் தாக்கியபோது வானவன் கோட்டைக் கதவை அடைத்துக் கொண்டு உள்ளேயே இருந்தான். அடைத்துக்கொண்டு உள்ளே இருக்கும் அரசனோடு போர்புரிவது அழகன்று என்று புலவரால் அறிவுறுத்தப் பட்ட சோழன் முற்றுகையைக் கைவிட்டான். எனினும், வானவன் கருவூர்க் கோட்டைக்குள் தொடர்ந்து இருக்க விரும்பவில்லை. தன் படைத்தலைவன் பிட்டனிடம் கருவூரை ஒப்படைத்துவிட்டு. பாழி நகருக்குச் சென்று தங்கி பெரும்படை ஒன்றைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான். நிலைமை அறிந்த கிள்ளிவளவன் - 1 அவனைப் பாழி நகரிலே தாக்கினான்; பாழிக் கோட்டையை அழித்தான். மாந்தரஞ் சேரல் தன் மற்றொரு கோட்டையான வஞ்சிமுற்றக் கோட்டைக்குத் தப்பிவிட்டான். கிள்ளிவளவன் - 1 (குளமுற்றத்துத் துஞ்சியவன்) பாழிக் கோட்டையைத் தாக்கிக் கொண்டிருந்தபோது கருவூரில் அப்போரின் எதிரொலியாக மற்றொரு போர் மூண்டது. அந்தப் போர் பிட்டனுக்கும், கிள்ளிவளவன் - 2 (குராப்பள்ளித் துஞ்சியவன்) என்பவனுக்கும் இடையே நடைபெற்றது. கிள்ளிவளவன்-2, பிட்டனைப் படுகாயம் அடையும்படி செய்தான். பாழியிலிருந்து தப்பிவந்த மாந்தரஞ்சேரல் வஞ்சிமுற்றக் கோட்டையில் இருந்தபோது கிள்ளிவளவன்-1, கிள்ளிவளவன்-2 ஆகிய இருவரும் தாக்கினர். மாந்தரஞ்சேரல் கொல்லப்பட்டான். |