பக்கம் எண் :

370மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

இந்த நிகழ்ச்சிகள் கிள்ளிவளவன் - 1, கிள்ளிவளவன் - 2 ஆகிய இருவரும் சமகாலத்தவர் என்பதைத் தெளிவாக்குகின்றன.4 ஒருவன் குளமுற்றத்தில் துஞ்சினான் என்றும், மற்றொருவன் குராப்பள்ளியில் துஞ்சினான் என்றும் கூறப்படுவதால் இவர்கள் இருவரையும் ஒருவர் எனக் கூறமுடியவில்லை.

கிள்ளிவளவன் - 1, கருவூரை முற்றுகையிட்டபோது போரே நடைபெறவில்லை என்பது தெளிவு. கிள்ளிவளவன்-2, கருவூரை முற்றுகையிட்டபோது போரும் நடந்தது. போரில் பிட்டன் என்பவனும் படுகாயம் அடைந்தான். இந்த வேறுபட்ட நிகழ்ச்சிகள் ஒரே அரசன் காலத்தில் நிகழ்ந்தவை என்று கூறுவது பொருந்தா. இதனாலும், கிள்ளிவளவன்-1, கிள்ளிவளவன்-2 ஆகியோர் வேறு வேறு அரசர்களே என்பது பெறப்படும்.

இவர்கள் உடன்பிறந்த அண்ணன் தம்பியராகவோ பெரியப்பன். சிற்றப்பன் மக்களாகவோ இருக்கலாம். நலங்கிள்ளியின் மகன் கிள்ளிவளவன்-1 என்று அவனது வரலாற்றிலே கண்டோம்.

ஆட்சி

வண்டிச் சக்கரம் கல்லால் தடுக்கப்பட்டாலும், பள்ளத்தில் ஆழ்ந்தாலும் பொருட்படுத்தாமல் பெரிதும் முண்டி இழுத்துச் செல்லும் காளைமாடுபோல இவன் தன் நாட்டை நடத்திச் சென்றான்.5

இவனது ஆட்சிக்குச் சோதனையாகத் தடைகளும் சோர்வும் பிறந்தன. அவற்றை இவன் வலிமையுடன் சமாளித்து அரசாட்சி நடத்தி வந்தான். இதனால், அவன் நாட்டுமக்கள் முன் அவர்களின் துன்பம் நீக்கும் இவனது ஆட்சிக் கோலமே நின்றது. உறையூர் மருத்துவன் தாமோதரனாரும் விறலியும் கடற்கரை ஓரமாகச் சென்றுகொண்டிருந்த போது கடலில் முழுநிலாத் தோன்றுவதைக் கண்டனர். உடனே அவர்களுக்கு இந்தச் சோழனின் வெண்கொற்றக் குடைதான் நினைவுக்கு வந்தது. அந்த நிலாவைச் சோழனது குடையென எண்ணி வணங்கினர்.6