பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்37

ஆகிய ஐவகை ஒளிப்பிழம்புகள் ஒருங்கிணைந்தால் தோன்றும் ஒளிபோல இவனது பொலிவும் புகழும் விளங்கின.69 இவனது புகழ் திருமாலின் புகழ்போலப் பரவியிருந்தது.70 இவனது ஆட்சிக்குக்கீழ் இருந்த நாடுகள் வளமுடனும், இவனைத் எதிர்த்த நாடுகளின் வளமை பாழடைந்தும் காணப்பட்டன.71

இசை வேட்கை

இவனது தந்தை உதியஞ்சேரல் இன்னிசை முழக்குடன் மகிழ்வாக வாழ்ந்தவன்.72 இவனும் மகிழ்ச்சியால் முழக்கும் முரசொலியைக் கேட்டுத் தன்னையே பரிசிலாகக் கொடுத்தான்73 இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இசையின்மீது இருந்த ஈடுபாடு நன்கு விளங்கும்.

பெற்றோர்

இவனது முன்னோர்கள் நாவலந் தண்பொழில் முழுவதும் ஆட்சிபுரிந்து புகழுடன் விளங்கினர்.74 இவனது தந்தை அந்து வஞ்சேரலாகும்; தாயார் நல்லினி ஆகும்.

மனைவியின் மாண்புகள்

இவனது மனைவி சிறந்த அழகியாவாள்.75 அடக்கமான தோற்றப் பொலிவினை உடையவள்.76 பெரிய சான்றாண்மைப் பண்புகள் அவளிடம் அமையப் பெற்றன; நாணம் மிக்கவள்;77 கணவனிடம் ஊடல் கொள்ளாத ஆறிய கற்பினை உடையவளாக விளங்கினாள். கணவ னொடு ஊடிய காலத்தும் இனிய சொற்களையே கூறுவாள்.78 அவளே வேளாவிக் கோமான் பதுமன் மகளாவாள்.79 இவன் பெற்ற பிள்ளைகள் 4, 6 ஆம் பத்தில் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளனர்.

‘சோழன் மணக்கிள்ளி’யின் மகள் நற்சோணை என்னும் பெய ருடைய மற்றொரு பெண்ணை இவன் மணந்தான்.80 இவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் இருவர். மூத்தவன் பதிற்றுப் பத்தில் ஐந்தாம் பத்தின் தலைவன். இளையவன் சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகள்.


69. பதிற். 14 : 3 - 4

70. ௸ 15 : 39

71. ௸ 13 : 19 - 28, 15 : 1 - 8

72. ௸ பதி, 2 : 2

73. ௸ 15 : 21

74. ௸ 14 : 19 - 20

75. ௸ 14 : 13 - 15

76. ௸ 16 : 10 ‘அடங்கிய சாயல்’

77. ௸ 19 : 14

78. ௸ 16 : 10

79. ௸ பதி. 4 : 2-3, 6 : 1-2

80. ௸ 5 : 3