404 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
இவை சங்க காலத்துப் பாண்டிய நாட்டின் எல்லைகளையும் அந் நாட்டில் சிறந்து காணப்பெற்ற மலைகள், ஆறுகள், பட்டினங்கள், நகரங்கள் ஆகியவற்றையும்பற்றிச் சங்க இலக்கியச் சான்றுகளால் அறிவனவாகும். இனி, அக்காலத்துப் பாண்டிய மன்னர்களைப் பற்றி ஆராய்வோம். பாண்டிய மன்னர்களின் குலம்32 1. அயலகக் குறிப்புகளால் அறியப்படும் பாண்டிய மன்னர்கள் பாண்டிய மன்னர்களைப்பற்றிய வரலாறு தொடர்ச்சியாகவும் வரன்முறையாகவும் கிடைக்கப்பெறவில்லை. அயல் நாட்ட வருடைய குறிப்புகளைக் கொண்டு சில பாண்டிய மன்னர்களின் வரலாறுகளை அறியமுடிகிறது. இவர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்களில் குறிப்புகள் இல்லை.
32. திருக்குறளின் சிறந்த உரையாசிரியராகிய பரிமேலழகர் ‘குடிமை’ என்னும் அதிகாரத்தில் ஐந்தாவது திருக்குறளுக்குப் பொருள் கூறுமிடத்துப் பழங்குடி என்னும் சொல்லிற்குச் ‘சேர, சோழ, பாண்டியர் என்றாற்போலப் படைப்புக் காலம் தொடங்கி மேம்பட்டு வருதல்’ எனக் கூறியுள்ளார். ஆகையால், பாண்டியர் குலம் இன்ன காலத்தில் தோன்றியதென்று அறுதியிட்டுக் கூற இயலாது. தென்னிந்தியத் தலபுராணங்களில் பாண்டியர்கள் சந்திரகுலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பெறுகிறது. இக் கூற்றுகள் பாண்டிய மன்னர்களுடைய நீண்டகாலத் தொடர்பைக் குறிக்கின்றன. பாண்டிய மன்னர்களின் குலத்தைச் சார்ந்தவர்கள் தற்காலத்தில் தமிழ்நாட்டில் உள்ளனரா? என உறுதியாகக் கூறுவதற்கில்லை. சில வரலாற்றாசிரியர்கள் தென் தமிழ்நாட்டு மறவர் குலத்தைப் பாண்டிய மன்னர்களுடைய சந்ததியார் என்று கூறுவர். மற்றும் சிலர் கள்ளர்கள் இனத்தைச் சார்ந்தவர்களே பாண்டியர்களுடைய சந்ததியார் ஆவர் என உரைப்பர். இப்பொழுது தென்மாவட்டங்களில் வாழும் ‘பள்ளர்’ இனத்தைச் சேர்ந்தவர்களே பாண்டிய மன்னர்களின் மூதாதையர்கள் என்றும், ‘மள்ளர்’ என்று சங்க இலக்கியங்களில் காணப்படும் குலப்பெயர் பள்ளர் என்று திரிந்துவிட்டது என்றும் சிலர் கூறுவர். இக் கூற்றில் எவ்வளவு வரலாற்றுண்மை பொதிந்துள்ளது என்பது அறிஞர்களின் ஆய்விற்கு உரியதாகும். சங்க இலக்கியங்களில் பயின்றுள்ள ‘மள்ளர்’ என்னும் சொல் பள்ளர் எனத் திரிந்தது என்பதற்கும், இப் பள்ளர்கள் பாண்டிய மன்னர்களின் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கும் தகுந்த ஆதாரங்கள் இல்லை. (ப-ர்) |