பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்405

கி. மு. நான்காம் நூற்றாண்டுப் பாண்டியன்

இலங்கை நாட்டின் முதல் அரசனான விசயனுக்குப் பெண் கொடுத்த பாண்டியன் ஒருவனைப்பற்றித் தீபசம்சம், மகாவம்சம் ஆகிய இலங்கை வரலாற்று நூல்கள் கூறுகின்றன. விசயன், தன்னுடைய 700 தோழர்களோடு வட இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து, அங்கு அரசு செலுத்தி வந்த இயக்கர் என்னும் இனத்தாரை வென்று, தனது அரசை நிறுவினான். விசயனுக்கு முடிசூட்ட விரும்பிய அரசன் அவனது புதல்வியை மணம் பேசித் திருமணம் செய்வித்தனன். ஆனால், விசயனுக்கு மகட்கொடை செய்த பாண்டிய அரசனுடைய பெயர் இவ் வரலாற்று நூல்களில் குறிப்பிடப் பெறவில்லை. மற்றும் விசயனுக்குப் பாண்டியன் மகளைத் திருமணம் செய்வித்த அவனுடைய 700 தோழர்களும் பாண்டிய நாட்டுப் பெருங்குடியிலிருந்து மகளிரை மணந்து கொண்டனர் என்றும் இந் நூல்கள் கூறுகின்றன. மணமகளான பாண்டிய குமாரியையும், மற்றும் பிற மணமகளிரையும் படைச் சிறப்புடன் இலங்கைக்கு அனுப்பி வைத்தான். அவர்களோடு தன் நாட்டிலிருந்து கொல்லர். தச்சர், உழவர், குயவர் முதலான பதினெட்டு வகையான தொழிலாளர்களையும் அவர்களுடைய குடும்பத்தினர் ஆயிரவரையும் இலங்கைக்கு அனுப்பி வைத்தான். இலங்கை மன்னனாகிய விசயன் தன்னுடைய மாமனாராகிய பாண்டியனுக்கு ஆண்டுதோறும் இரண்டு இலட்சம் பொன் பெறுமானம் உள்ள முத்துகளைக் காணிக்கையாக அனுப்பிக் கொண்டிருந்தான். இந் நிகழ்ச்சிகள் கி. மு. நான்காம் நூற்றாண்டில் நடந்ததாக இலங்கை வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இச் செய்திகளை உறுதி செய்யக்கூடிய சான்றுகள் தமிழ் நாட்டில் கிடைக்கவில்லை. இலங்கை மன்னன் விசயனுக்கு மகட்கொடை அளித்ததைத் தவிர, அப் பாண்டியமன்னனைப் பற்றிய வேறு செய்திகள் தெரியவில்லை.

பாண்டிய அரசி

சந்திரகுப்த மௌரியருடைய ஆட்சிக் காலத்தில் கி. மு. 304-ல் செலியூகஸ் நிகேட்டாருடைய தூதனாகப் பாடலிபுத்திரத்தில் இருந்த மெகஸ்தனீஸ் தாம் எழுதிய இண்டிகா என்னும் நூலில் பாண்டிய நாட்டில் ஒரு பெண் ஆட்சி செய்தாள் என்று கூறியுள்ளார். அவளது பெயர் தடாதகைப் பிராட்டி என்று தமிழ்ப் புராணங்கள் கூறினாலும் அவளுடைய சரியான பெயர் தெரியவில்லை.