| 416 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
நண்பர்களுக்கு உயர்வளித்தான். தன்னைவிட வலிமை உடையவ ராயின் அவர்களிடம் வணங்குவதோ, தன்னைக் காட்டிலும் வலிமை குறைந்தவர்கள் முன்னிலையில் தன்னைப் புகழ்ந்துபேசிக் கொள்வதோ இவனிடம் காணமுடியாத பண்புகள். பிறரிடம் இரப்பதோ, இரந்தவர் களுக்குக் கொடுக்க மறுப்பதோ இவனிடம் கிடையாது. பல அரசர்கள் கூடியிருந்த சபையில் தலைமை தாங்கினான்; தாக்க வரும் படையை எதிர்க்கத் தான் முதலில் சென்றான்; பல படைகள் தன் முன் நிற்க மாட்டாது புறமிட்டு ஓடியதைக் கண்டு மகிழ்ந்தான்; குதிரைமீதும், தேர்மீதும், களிறுமீதும் ஊர்ந்து சென்று அந்தந்தப் படைகளின் தலைமையை ஏற்றுப் போரிட்டான்; பாணர்களின் பசியைத் தீர்த்தான்; மிகுதியாகக் குடிக்காமல், அளவோடு பருகி, கள் மயக்கம் கொண்டு பேசும் வழக்கம் இவனிடம் இல்லை. இத்தகைய நற்பண்புகள் உடையவனாக இருந்தான்.30 நம்பி நெடுஞ்செழியன் பாண்டியன் அறிவுடை நம்பி என்னும் அரசன் ஒருவன் சங்க காலத்தில் விளங்கினான்.31 நம்பி நெடுஞ்செழியன் என்ற பெயரை நோக்குகையில் இவனை அறிவுடை நம்பியின் மகன் என்று கருதலாம். 3. மாறன் என்னும் பெயருடைய அரசர்கள் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடிய புலவர்களான மருதன் இளநாகனாரும் நக்கீரரும் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனையும் நேரில் கண்டு பாடியுள்ளனர்.1 இவனைப் பாடியுள்ள பிற புலவர்களை நோக்கும் போது இவன் தலையாலங்கானத்து நெடுஞ்செழியனுக்குப் பிறகு ஆட்சி புரிந்தவன் எனத் தோன்றுகிறது. நெடுஞ்செழியனுக்கும் இவனுக்கும் இருந்த உறவையும் நெடுஞ்செழியனுக்கு அடுத்து அரியணையில் அமர்ந்தான் என்பதையும் திட்டவட்டமாகக் கூற இயலாத நிலை உள்ளது. இவன் நெடுஞ்செழியனுடைய மகனா என்று பற்றியும் கூறமுடியவில்லை. நெடுஞ்செழியன் மதுரையில் பேரரசனாக விளங்கியபோது இவன் கொற்கைப் பகுதியில் இருந்து நாடுகாவல் புரிந்து வந்தான்
30. ௸ 239 31. ‘பாண்டியர்’ என்னும் பகுதியில் விளக்கம் 1. புறம்.55,56 |