| 418 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
சென்ற காட்சியையும் நாம் உணரமுடிகிறது. இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் என்னும் பெயர் இவன் இலவந்திகைப் பள்ளி என்னுமிடத்தில் மாண்டதைத் தெரிவிக்கிறது. இலவந்திகை என்னும் சொல் தாமரைக் குளத்தை சூழ்ந்த சோலையாகும். சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன் இவனைப் பாடிய புலவர் வேறு எந்த அரசனையும் தமது பாடல் களில் குறிப்பிடவில்லை. ஆகவே, இவனது காலத்தை திட்டவட்டமாக அறிய முடியவில்லை. மணிமேகலையை இயற்றிய மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் இவர் அல்லர் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இவ்விருவரும் ஒருவராயின் இவரால் பாடப்பெற்ற இந்த நன்மாறன் சேரன் செங்குட்டுவன் காலத்தவன் என்று கூறலாம். இவனது அகன்ற மார்பில் முத்தாரம் அணிந்திருந்தான். இவனது கைகள் முழந்தாள்வரை நீண்டுட இருந்தன. பகைவர்களைக் காய்வதில் இவன் ஞாயிறு போன்றவன்; புலவர்களுக்கு நலம் சொரிவதில் திங்கள் போன்றவன்; பொய் என்பதை முற்றிலும் வெறுத்தவன். இவனது இறுதிக்காலம் சித்திரமாடம் என்னுமிடத்தில் முடிவுற்றது. இஃது ஒரு மாளிகையின் பெயராகவோ, ஊர்ப் பெயராகவோ இருக்கலாம். முடத்திருமாறன் இவன் கபாடபுரத்தில் இருந்த இடைச்சங்கத்தைப் புரந்து வந்தான் என்றும், கபாடபுரம் கடல்கோளுக்கு இரையானபோது தப்பி மதுரைக்கு வந்து கடைச்சங்கத்தை நிறுவினான் என்றும் இவனைப்பற்றிச் செவிவழிச் செய்தி கூறுகிறது.10 சிறந்த புலவனாகவும் விளங்கிய இவனது பாடல்கள் இரண்டு சங்க நூல்களில் இடம் பெற்றுள்ளன. இவன் தனது நண்பனான குட்டுவன் என்னும் சேர அரசனைத் தனது பாடலில் குறிப்பிட்டுள்ளான். இவன் குடவரைப் பகுதிக்கு அரசன். குடவரை என்பதை மேற்குத் தொடர்ச்சிமலையாகக் கொள்ளலாம். நீரும் நிழலும் இல்லாத வழியில் பொருள் தேடச் செல்லும் தலைவன் தன் காதலியை நினைத்துக்கொண்டு கவல்வதாகவும், களவு வழியில் காதலியைப்பெறத் தலைவன் மின்னல் வெளிச்சத்தில் வழியை அறிந்து வரும் அச்சந்தரும் காட்சியையும் தனது இரு பாடல்களில் சிறப்பித்துப் பாடியுள்ளான்.11
10. இறையனார் களவியல் உரை 11. நற். 105 : 5 - 10, 228 |