பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்429

அல்லது ஆயர்குடியில் தோன்றியவர் என்பதும், ஆட்சிப் பொறுப்பேற்று விளங்கியவர்கள் என்பதும் பெறப்படும். பாண்டியரில் ஒரு கிளைக் குடியினர் கண்டீரமலைப் பகுதியில் அண்டர் என்னும் பெயருடன் செல்வாக்குப் பெற்று விளங்கினார்கள் எனலாம். இந்த அண்டர் களுக்குப் பெருந்தலைவனாக விளங்கியவன்தான் குறுவழுதி. இவன் சிறந்த புலவனாக விளங்கியதால் ‘ஆர்’ என்னும் சிறப்பு அடை மொழி சேர்த்துக் ‘குறுவழுதியார்’ என்று வழங்கப்பட்டான். இவனுடைய பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை, புறநானூறு ஆகிய மூன்றிலும் காணப்பெறுகின்றன. இவன் பாண்டிய மரபில் தோன்றியவ னாகத் தெரியவில்லை.

நல்வழுதி

நல்வழுதியர் என்னும் புலவராக அறிமுகமாகும் இவரை வழுதி என்ற பெயரைக்கொண்டு, ஒரு சிறு பகுதிக்கு மன்னனாக விளங்கி யிருக்கலாம் எனக் கொள்கிறோம். வையை ஆற்றைச் சிறப்பித்துப் பாடும் இவர் அதனைப் ‘போரடு தானையான் யாறு’32 என்று குறிப்பிடுகிறார். இதனால், வையை அவருக்கு உரிய ஆறு அன்று என்பது பெறப்படுகிறது. இவர் பிற வழுதியரைப் போலவே, பாண்டிய நாட்டின் தென்பகுதியில் ஒருபால் ஆண்டுவந்தார் என்று கருதலாம்.

பாண்டியன் மாறன் வழுதி

பாண்டியன் பன்னாடு தந்தானும் பாண்டியன் மாறன் வழுதியும் ஆகிய இருவரும் புலவர்களாகக் கருதப்பெறுகின்றனர்,33 இந்த இரண்டு பெயர்களும் ஒருவனையே குறிப்பன என்று கொள்ளத்தக்க வகையில் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி என்ற நிலையில் அமைந்த பெயரும் காணப்படுகிறது. இப் பெயர் கொண்டவன் நற்றிணை என்னும் தொகுப்பு நூலை உருவாக்கியவன்.34

‘கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி’ என்பானை பல புலவர்கள் பாடியுள்ளனர். தமிழ்நாடு. மூவேந்தர்க்கும் பொது என்று கூறினால் இவன் பொறுக்கமாட்டானாம். தனக்கே உரியது என்று ஆக்கிக்கொள்ளப் போருக்கு எழுவானாம். இவ்வாறு போருக்கெழுந்த


32. பரிபா. 12: 86

33. நற். 97, 301; குறுந். 270.

34. சங்க இலக்கியங்கள், ‘வரலாறு’, வையாபுரிப்பிள்ளை, பக். 1373