பக்கம் எண் :

436மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

சங்கப்பாடல் தொகுதிகளில் இவனுடைய பாடல்களாக அகத் துறைப் பாடல்கள் மூன்று இடம்பெற்றுள்ளன. தினைப் புனம் காக்கச் சென்ற பெண் ஒருத்தி அதனை மறந்து அவளது காதலனோடு கூட மகிழ்ந்தே காலம் போக்குவதை அவளது தோழி பக்குவமாகத் தவறு என்று அறிவுறுத்தும் வகையில் ஒரு பாடல் அமைந்துள்ளது.19 காதலன் ஒருவன் அடிக்கடி காதலியிடம் கள்ளத் தொடர்பு கொள்வதைத் தோழி வன்மையாகக் கண்டிப்பதாய் மற்றொரு பாடல் அமைந்துள்ளது.20

கற்பரசி ஒருத்தியின் கையில் இருந்த குழந்தையைப் பேய் ஒன்று பிடுங்கிக் கொண்டது போலத் தோழியிடமிருந்து தலைவியைத் தலைவன் பிடுங்கிக் கொண்டான் என்றும், பூப்போன்ற அவளைத் தேனீப் போன்று நலம்நுகர்ந்து சென்றான் என்றும் நயம்படப் பாடிய பாடல் ஒன்றும் கிடைத்துள்ளது21 நம்பி நெடுஞ்செழியன் எனும் பெயர் கொண்ட அரசன் ஒருவன் மிகச் சிறந்த போர்த்திறம் படைத்த அரசனாக விளங்கியதை நெடுஞ்செழியன் வரலாற்றில் காணலாம். இந்தப் பெயர் நம்பியின் மகன் நெடுஞ்செழியன் என்பதாக இருக்கக்கூடும்.

பாண்டியன் கீரஞ்சாத்தன்

கீரன் மகன் சாத்தன் என்னும் பெயர் கீரஞ்சாத்தன் என்று அமைந்திருக்கக்கூடும். பாண்டியன் என்னும் அடைமொழியைக் கொண்டு இவன் பாண்டியர் குடியைச் சேர்ந்தவன் அல்லது பாண்டியர் படைத் தலைவன் என்பது தெரியவருகிறது. கள்ளுண்ட மயக்கத்தால் கடமையை மறந்து சில போர்வீரர்கள் அஞ்சியிருந்தபோது, எஞ்சிய படையினருக்குப் பாதுகாவலனாகத் தழுவிக் கொண்டு போரில் குதித்து முன்னேறிச் சென்றான். போர் வீரர்கள் காயம்பட்டு உணவு கொள்ளாமல் இருந்தபொழுது இவன், நீங்கள் உணவு கொள்ளாவிட்டால் நானும் உண்ணமாட்டேன்’ என்று சூளுரைத்து அவர்களை உண்ணும்படி செய்தான். இதனால் இவன் சிறந்த படைத்தலைவனாகவும், படை வீரர்களைத் தன் உயிரைப்போல் போற்றும் உயர்ந்தோனாகவும் விளங்கினான். பாண்டியன் என்னும் பெயர், பாண்டிய அரசர்கள் இவனைப் பாராட்டி அளித்த சிறப்புப் பட்டமாகவும் இருக்கலாம். பாடிய புலவர் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனையும் பாடியுள்ளார். ஆகையால், இவன் நன்மையுடைய படைத்தலைவனாக இருந்தான் என்று கூறலாம்.22


19. அகம். 28 : 3 - 14

20. ௸ 28

21. நற். 15 : 7 -10

22. புறம். 196