பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்435

நெடுமிடல் படைத்தலைமை

பசும்பூண் பாண்டியனுக்குப் படைத்தலைவனாக விளங்கியவன் நெடுமிடல் என்பவனாவான்.13 பசும்பூண் பாண்டியனுடைய பகைவர்கள் இப் படைத்தலைவனைக் கொன்ற பிறகு அரிமணவாயில் உறத்தூரில், கள்ளுடைப் பெருஞ்சோறு உண்டு வெற்றிவிழாக் கொண்டாடினர் என்று அறிகிறோம்.14 இந்த நெடுமிடல் என்பவனுடன் கொடுமிடல் என்பவனும் மற்றொரு படைத்தலைவனாக இருந்தவன் எனத் தெரிகிறது. இவர்களைப் போரில் கொன்றவன் நார்முடிச் சேரல் என்று கூறப்படுகிறது.15 இதைக் கருதுமிடத்துப் பசும்பூண் பாண்டியன் வடக்கில் கொல்லிமலை, தெற்கில் பொதியமலை ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்ட பெருநிலப்பரப்பை, அதிகன் முதலிய சிறப்பு மிக்க வள்ளல்களின் துணையுடன் அரசு புரிந்தான் எனக் கொள்ளலாம்.

பாண்டியன் அறிவுடைநம்பி

இவனை நேரில் கண்டு பாடிய புலவர் ‘அறிவுடைவேந்தன்’ என்னும் தொடரைப் பொதுப்படையாகக் குறிப்பிடுகிறார்.16 இதனால் இவனை அறிவுடைநம்பி என்று குறித்தார்களோ என்று எண்ண வேண்டியுள்ளது. இவனது பாடல்கள் இன்பப் பயனை விளக்குவன வாக உள்ளன. நம்பி என்னும் பெயர், முறுக்கான உடற்கட்டுக் கொண்டு அழகுடன் பொலிவும் ஆடவர்க்கெல்லாம் வழங்கப்பெற்ற பொதுப் பெயர் ஆகும்.

இவன் அரியணையில் அமர்வதற்குமுன் அரசியல் அலுவலர்கள் குடிமக்களின் நிலையைப் பார்த்து மிகுதியான வரிகளை வசூலித்த தாகத் தெரிகிறது. புலவர் இவனை நேரில் கண்டு சிறிது சிறிதாகப் பல தவணைகளில் மக்கள் வரிகளைச் செலுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்பதைக் குறிப்பாக உணர்த்தினார்.17 அரசன், புலவரின் அறிவுரையை ஏற்று மக்களின் விருப்பம்போல் பல தவணைகளில் வரி செலுத்த அனுமதித்தான் எனலாம். வாழ்க்கையில் பலவகையான செல்வ வளங்களும் ஒருங்கமையப் பெற்றிருந்தாலும் மக்கட்செல்வம் இல்லாவிட்டால் இன்பம் அமையாது என்று இவன் தன்னுடைய பாடல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளான்.18


13. அகம். 266 : 12

14. ‘அரிமண வாயில்’ என்பது புதுக்கோட்டைக்கருகில் உள்ள அரிமளம்

15. பதிற். 32 : 9 - 11 16. புறம். 184 : 5

17. புறம். 184 18. ௸ 188