440 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
யாதொரு தீங்கும் நேராதபடி அவள் அறியாமலே காத்துவந்தான். நெடுநாள் சென்றபிறகு, நள்ளிரவில் கீரந்தை வீட்டிற்குள் யாரோ இருவர் பேசுங் குரல் கேட்டது. நள்ளிரவில் நகர்வலம் வந்த பாண்டியன், யாரேனும் கீரந்தையின் மனைவிக்குத் தீங்குசெய்ய வந்தனரோ என்று கருதி அந்த வீட்டுக் கதவைத் தட்டினான். உள்ளிருந்து கணவனாகிய கீரந்தை யின் குரல் ‘யார் அது?’ என்று கேட்டது. கீரந்தை ஊரிலிருந்து திரும்பி வந்துவிட்டான். அவனுடைய பேச்சுக்குரல்தான் உள்ளிருந்து கேட்டது. கதவைத் தட்டினபடியால் அவன் அவள்மீது ஐயப்படுவானே. அவனுடைய ஐயத்தைப் போக்கவேண்டுமே’ என்று கருதிய பாண்டியன் அந்தத் தெருவிலுள்ள எல்லா வீட்டுக் கதவுகளையும் தட்டிக்கொண்டே அரண்மனைக்குப் போய்விட்டான். அடுத்த நாள் அந்த வீதியில் உள்ளோர் எல்லோரும் முன்னிரவு தங்கள் வீட்டுக் கதவுகளை யாரோ தட்டிவிட்டுச் சென்றார்கள் என்று மன்னனிடம் முறையிட்டனர். தன் மனைவியின்மீது ஐயங்கொண்ட கீரந்தை எல்லாம் வீட்டுக் கதவுகளும் தட்டப்பட்டதை அறிந்த தன் மனைவியின்மேல் ஐயம் நீங்கினான். பிறகு பாண்டியன் தானே அந்தக் குற்றம் செய்ததை அரசவையில் ஒப்புக்கொண்டு, கதவுகளைத் தட்டின குற்றத்திற்காகத் தன்னுடைய கையை வெட்டிக் குறைத்துக் கொண்டான் என்று கதை கூறப்படுகிறது.6 மலயத்துவச பாண்டியன் மலயத்துவசன் என்னும் பெயர் மலையைத் தன்னுடைய அடையாளமாகக் கொண்டவன் என்ற பொருளுடையதாகும். சங்க இலக்கியத்துள் இவனைப் பற்றிய குறிப்பு இல்லை. மலையத்துவச பாண்டியன் காஞ்சனை என்ற பெயருள்ள பாண்டிமா தேவியோடு வாழ்ந்தான். இவ்விருவருக்கும் மகப்பேறில்லாமையால் தவம் செய்து ஒரு பெண்மகவைப் பெற்றனர். அக் குழந்தைக்குத் தடாதகை என்று பெயரிடப்பெற்றது. அப்பெண் பாண்டிய நாட்டை அரசாண்டாள் என்று புராணக் கதை கூறுகிறது. மலையத்துவச பாண்டியனைப் பற்றி வடமொழி பாகவத புராணம் மற்றொரு வரலாற்றைக் கூறுகிறது. இப் புராணக் கதைகள் நம்பத் தகுந்தன அல்ல.
6. சிலப். 23:42-52; பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் 23:42-52 |