பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 441 |
தடாதகைப் பிராட்டியார் மலையத்துவச பாண்டியனுக்குப் பிறகு அவனுடைய மகளாகிய தடாதகைப் பிராட்டியார் அரசாண்டதாகத் திருவிளையாடற் புராணங்கள் கூறுகின்றன7 அங்கயற்கண்ணியாகிய மீனாட்சி அம்மையே தடாதகைப் பிராட்டியாகப் பிறந்தார் என்று புராணக் கதைகள் கூறுகின்றன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பாடலிபுத்திரத்தில் செலியூகஸ் நிகேடாரின் தூதுவராக இருந்த மெகஸ்தனீஸ் தம்முடைய காலத்தில் பாண்டிய நாட்டை ஒரு பெண்ணரசி அரசாண்டாள் என்று கூறியுள்ளார். ஹெர்க்குலிஸ் என்ற கிரேக்க வீரனுக்குப் பண்டேயா என்ற பெண் இருந்தாள் என்றும், அவளுக்குத் தென்னாட்டில் கடற்கரை வரையில் உள்ள நாட்டை அரசாளக் கொடுத்தான் என்றும் மெகஸ்தனீஸ் கூறியுள்ளார். மலையத்துவச பாண்டியனை இவர் ஹெர்க்குலிஸ் என்று கூறினார் எனத் தோன்றுகிறது. அவளுடைய மகளுக்குப் பண்டேயா என்று பெயரிட்டான் என்பதும், பாண்டிய நாட்டைத் தடாதகையார் அரசாண்டார் என்பதும் ஒரே வரலாற்றைக் குறிக்கின்றன எனலாம். பாண்டிய அரசைப்பற்றி மெகஸ்தனீஸ் இன்னொரு செய்தியையும் கூறியுள்ளார். பாண்டிய அரசிக்கு 365 ஊர்கள் இருந்தன. ஒவ்வோர் ஊராரும் அரண்மனைக்கு நாள்தோறும் கடமை செலுத்தி னார்கள். இந்த அரசிறை. காசாக இல்லாமல் பொருளாகச் செலுத்தப் பட்டிருக் கலாம் எனத் தோன்றுகிறது. சிலப்பதிகாரத்தில் மாதரி என்ற இடைக்குல மடந்தை அரண்மனைக்குச் சேரவேண்டிய இறைவரியை நெய்யாகச் செலுத்தினாள் என்று கூறப்பட்டுள்ளது.
7. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் தடாதகைப் பிராட்டியார் திரு அவதார, திருமணப் படலங்கள். |