2. ஆரியப்படை கடந்த, அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன்* கடைச் சங்ககாலத்தில் ஆட்சிசெய்த பாண்டியரில் சிலர் நெடுஞ் செழியன் என்று பெயர் பெற்றிருந்தார்கள். அவர்களின் பெயர் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. அவர்களை, இன்னின்ன நெடுஞ் செழியர் என்று பிரித்தறிவதற்கு அவர்பெயர்களுடன் சில அடை மொழியிட்டு வழங்கினார்கள். நம்பி நெடுஞ்செழியன், ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்னும் பெயர்களைக் காண்க. இங்கு ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனுடைய வாழ்க்கை வரலாற்றை ஆராய்வோம். மதுரையிலிருந்து பாண்டி நாட்டை யரசாண்ட இந்த நெடுஞ் செழியன் கல்விகற்ற அறிஞன்; செய்யுள் இயற்ற வல்ல கவிஞன். கவிஞனாக விளங்கிய இவன் இயற்றிய செய்யுட்கள் முழுவதும் நமக்குக் கிடைக்கவில்லை. நற்காலமாக இவன் இயற்றிய ஒரே ஒரு செய்யுள் புறநானூற்றில் 183 ஆம் செய்யுளாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. அந்தச் செய்யுள் இது: உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே; பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளுஞ் சிறப்பின் பாலால் தாயுமனந் திரியும். ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக வென்னாது அவருள் அறிவுடை யோனாறு அரசுஞ் செல்லும். வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளுங் கீழ்ப்பா லொருவன் கற்பின், மேற்பா லொருவனும் அவன்கட் படுமே.
* செந்தமிழ்ச்செல்வி : 46, 1971 - 72* |