பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்445

செய்வதை வாழ்க்கையாகக் கொண்டவர் யௌத் தேயர். அர்ச்சுனீயர் என்பவர் அர்ச்சுனன் வழியில் வந்த போர் வீரர். இவர்களுக்கு அரசன் இல்லை. இவர்கள் கூட்டங்கூட்டமாக வசித்து வந்தனர். தங்களுக்குள் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். யாரெனும் அரசன் இவர்களைத் துணைக்கு அழைத்தால் அவனைச் சார்ந்து அவனுடைய பகைவனுடன் போர் செய்வது இவர்களுடைய தொழில். சில சமயங்களில் இவர்கள் கூட்டமாக வேறு நாட்டுடன் போர் செய்வதும் உண்டு. யௌத்தேய கணம் (கணம் - கூட்டம்) தமிழ்நாட்டின் மேல் அடிக்கடி போருக்கு வந்தது. யௌத்தேய கணத்தைச் சங்ககாலத் தமிழர் ஆரியப்படை என்று பெயரிட்டழைத்தனர். வடுக நாட்டுக்கு அப்பால் ஆரிய நாட்டிலிருந்து வந்தவர் ஆகையால் அவர்கள் ஆரியப்படை என்று பெயர் பெற்றனர். ஆரியப் படை (யௌத்தேய கணம்) யின் வரலாற்றை நான் எழுதிய கட்டுரையில் காண்க. (ஆரியப்படையும் யௌத்தேய கணமும். பக்கம் 128-134, கல்வெட்டுக் கருத்தரங்கு. 1966.)

அகநானூறு 386 ஆம் செய்யுளில் கூறப்படுகிற ஆரியப் பொருநன், ஆரியப் படையைச் சேர்ந்தவன் என்று தோன்றுகிறான். சோழநாட்டு வல்லத்துக் கோட்டை மேல் ஆரியப்படை வந்து முற்றுகை யிட்டபோது அக்கோட்டையிலிருந்த சோழன் அவ்வாரியப் படையை வென்று துரத்தினான். ஆரியப்படை உடைந்து ஓடிற்று. இதனை அகநானூறு 336 ஆம் செய்யுளினால் அறிகிறோம். பாண்டியன் நெடுஞ் செழியன் காலத்தில் ஓர் ஆரியப்படை போர் செய்ய மதுரைக்கு வந்ததையும் அப்படையை அவன் வென்று துரத்தியதையும் சிலப்பதிகார மதுரைக்காண்டம் கட்டுரைச் செய்யுளி னாலும், புறநானூறு 183 ஆம் செய்யுளின் அடிக்குறிப்பினாலும் அறிகிறோம்.

இவ்வளவு சிறந்த வீரனும் அறிஞனும் புலவனுமாக இருந்த இந்தப் பாண்டியன், மகளிர் மாட்டு வேட்கையுடையனாய்ச் சிற்றின்பப் பிரியனாக இருந்தான் என்பதை இவனுடைய சமகாலத்தில் வாழ்ந்தவ ரான இளங்கோவடிகள் (சேரன் செங்குட்டுவனுடைய தம்பியார்) கூறுகிறார். சிலப்பதிகாரம் கொலைக்களக் காதையில் இதனை இவர் கூறுகிறார்:

கூடல் மகளிர் ஆடல் தோற்றமும்
பாடற் பகுதியும் பண்ணின் பயங்களும்