444 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
வெற்றியின் காரணமாக இவன் “ஆரியப் படை கடந்த நெடுஞ் செழியன்” என்று சிறப்புப்பெயர் பெற்றான். அரசுச் செல்வமும், கல்விச் செல்வமும் கைவரப் பெற்ற இந்தப் பாண்டியன் ஆய்ந்தோய்ந்து பாராமல் அவசரப்பட்டுக் கோவலனைக் கொன்ற தவற்றின் காரணமாகக் கண்ணகி இவன்மீது தொடுத்த வழக்கில் தோற்றுத் தான் செய்தது தவறு என்று கண்டபோது மனம் பதறித் தான் நடத்தியது கொடுங்கோல் என்பதை அறிந்து நெஞ்சம் பதறிச் சிம்மாசனத்திலேயே உயிரை விட்டான். இவன் அரசு கட்டிலில் (சிம்மாசனத்தில்) இருந்து உயிர்விட்டபடியால் “அரசு கட்டிலில் துஞ்சிய நெடுஞ்செழியன்” என்றும் பெயர் பெற்றான். இஃது இவன் இறந்த பிறகு பெற்ற பெயர். நெடுஞ்செழியன் ஆரியப்படையை வென்றான் என்று கூறப்படுகிறான். ஆரியப்படை இவன்மேல் படையெடுத்து வந்ததா? இவன் ஆரியப் படையின்மேல் போருக்குச் சென்றானா? ஆரியப் படை என்றால் என்ன? இவை பற்றி ஆராய வேண்டியது சரித்திரம் அறிவதற்கு முதன்மையானது. சங்க காலத்துத் தமிழர் பாரதநாட்டை மூன்று பெரும் பிரிவுக ளாகப் பிரித்திருந்தார்கள். அவை தமிழகம் (தமிழ் நாடு), வடுக நாடு ஆரிய நாடு என்பவை. தமிழ் நாட்டுக்கு வடக்கே இருந்தது வடுக நாடு. அதுதமிழ்நாட்டின் வட எல்லையிலிருந்துவடக்கே விந்தியமலை வரையில் பரவியிருந்தது. வடுகநாடு மேற்கே அரபிக் கடல் முதல் கிழக்கே வங்காளக் குடாக்கடல் வரையில் நீண்டிருந்தது. வடுக நாட்டின் மேற்குப் பகுதியைக் கன்னடரும் கிழக்குப் பகுதியைக் கலிங்கரும் (ஆந்திரரும்) ஆட்சி செய்தனர். கன்னட நாடும் ஆந்திர நாடும் சேர்ந்ததே வடுக நாடு. கன்னடரும், ஆந்திரரும் வடவர் அல்லது வடுகர் என்று பெயர் பெற்றனர். வடுக நாட்டுக்கு அப்பால் (விந்திய மலைக்கு வடக்கே) இருந்தது ஆரியநாடு. அது வடஇந்தியா முழுவதும் அடங்கியிருந்தது. ஆரிய நாட்டிலே இருந்தவர் ஆரியர். ஆரிய நாட்டிலிருந்த படை ஆரியப்படை. கடைச்சங்க காலத்திலும் அதற்கு முந்திய காலத்திலும் வட மேற்கு இந்தியாவில் சில கூட்டத்தார் வாழ்ந்து வந்தார்கள். அந்தக் கூட்டத்தாரில் யௌத் தேயர், அர்ச்சுனீயர் என்னும் பிரிவினர் முக்கிய மானவர். இவர்களுடைய தொழில் போர் செய்வது. யுத்தம் (போர்) |