448 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
ஆடித் திங்கள் பேரிருள் பக்கத்து அழல்சேர் குட்டத்து அட்டமி ஞான்று வெள்ளி வாரத்து ஒள்ளெரி யுண்ண உரைசால் மதுரையோ டரைசு கேடுறும் (கட்டுரை. 133 - 136) என்பது. வழக்கு விசாரணைகளைச் சரிவரச் செய்யாமல் போனது இவனுடைய உயிருக்கே ஆபத்தாக முடிந்து விட்டது. பாண்டிமாதேவி யின் பொற்சிலம்பைத் திருடின கள்ளன் தன்னிடம் இருக்கிறான் என்று பொற்கொல்லன் பாண்டியனிடம் கூறியபோது, பாண்டியன் அதனை நன்றாக விசாரணை செய்யவில்லை. அல்லது, தக்க பொறுப்புள்ள அதிகாரியிடத்தில் ஒப்படைத்து விசாரிக்கச் செய்யவும் இல்லை. அவன் தன் கடமையைச் செய்யாமல் தவறினான். இஃது அவனுடைய இயற்கை. பொற்கொல்லனுடைய வார்த்தையை அவன் முழுவதும் நம்பினான். விசாரணை செய்யாமலே, ஊர் காப்பாளரை அழைப்பித்து, “தாழ்பூங் கோதைதன்காற் சிலம்பு கன்றிய கள்வன் கைய தாகில் கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கு” என்று கட்டளை யிட்டான். இந்தச் சோர்பு இவன் உயிருக்கே ஆபத்தாக முடிந்தது. இவன்மீது கண்ணகி வழக்குத் தொடுத்து வழக்காடிய போது, இவ்வரசன் தான் செய்தது பிழை என்பதை அறிந்தான். அறிந்து அரசு கட்டிலிலேயே உயிர்விட்டான். ஆரியப்படை கடந்த, அரசு கட்டிலில், துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனின் இந்த வரலாறுகளை யெல்லாம் சிலப்பதிகாரத்தி லிருந்து அறிகிறோம். இவனுடைய சமகாலத்திலிருந்த சேர அரசர்கள், இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனும் அவன் தம்பியான பல்யானைச் செல் கெழுகுட்டுவனும், சேரன் செங்குட்டுவனும் ஆவர். கொங்கு நாட்டில் சேரரின் இளைய வழியைச் சேர்ந்த மாந்தரஞ்சேரல் (செல்வக் கடுங்கோவாழியாதன்) அரசாண்டிருந்தான். சோழ நாட்டில் இருந்தவன் வடிவேற்கிள்ளி. தொண்டை நாட்டைக் காஞ்சியிலிருந்து அரசாண்டவன் வடிவேற்கிள்ளியின் தம்பியான இளங்கிள்ளி, இவர்கள் எல்லோரும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர்கள். |