பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 449 |
இந்தப் பாண்டியன் நெடுஞ்செழியனைப்பற்றித் திரு. ச. வையாபுரிப் பிள்ளை அவர்கள் ஓரிடத்தில் சரியாகவும் வேறொரிடத்தில் தவறாகவும் எழுதியிருக்கிறதைச் சுட்டிக்காட்ட வேண்டி யிருக்கிறது. 1940 ஆம் ஆண்டில் சைவசித்தாந்த சமாசம் வெளியிட்ட சங்க இலக்கியம் (எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும்) என்னும் நூலின் பதிப்பாசிரியராக இருந்தவர் திரு. வையாபுரிப் பிள்ளை அவர்கள், அந்த நூலில், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்னுந் தலைப்பில், இவன் பாடிய புறம் 183 ஆம் செய்யுளைப் பிள்ளை யவர்கள் பதிப்பித்திருக்கிறார்கள். ஆனால், பிள்ளையவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய ‘தமிழ்மொழி தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் நூலில் 145 ஆம் பக்கத்தில் இந்தப் பாண்டியனைச் சந்தேகிக்கிறார். (இந்த ஆங்கில நூல் 1956 ஆம் ஆண்டில் இவர் காலஞ் சென்ற பிறகு அச்சிடப்பட்டது). இந்த அரசன் உண்மையில் உயிர்வாழ்ந்திருந்தானா என்று இவர் ஐயப்படுகிறார். சங்க இலக்கியத்தை அச்சிட்டபோது இவருக்கு இல்லாத ஐயம் பிற்காலத்தில் இவருக்கு எப்படி ஏற்பட்டது! இந்தப் பாண்டியன் கற்பனைப் புருஷன் என்றால், இவன் பாடிய செய்யுள் எப்படிப் புறநானூற்றில் தொகுக்கப்பட்டிருக்கும்? ஆனால், வையாபுரிப் பிள்ளையின் நண்பரும் தமிழ் நூல்களும் தமிழ் நாட்டுச் சரித்திரங்களும் பிற்காலத்தவை என்று கூறுகிறவருமான திரு. கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி இந்தப் பாண்டியனைப்பற்றி ஐயப்பட வில்லை. இந்தப் பாண்டியன் உண்மையில் வாழ்ந்திருந்தவன் என்றும் புறநானூற்று 183ஆம் செய்யுளைப் பாடியவன் என்றும் சேரன் செங்குட்டுவனின் சமகாலத்திலிருந்தவன் என்றும் கோவலனைத் தவறாகக் கொன்று அந்தத் தவற்றைப் பிறகு அறிந்து சிம்மாசனத்தி லிருந்தபடியே உயிர் விட்டவன் என்றும் சாஸ்திரியார் எழுதுகிறார். (P. 524, 544. A Comprehensive History of India. Vol. 2. 1957). ஆரியப்படை கடந்த, அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனுக்குப் பிறகு அவனுடைய தம்பியான வெற்றி வேற் செழியன், கொற்கையில் இளவரசனாக இருந்தவன், மதுரைக்கு வந்து அரசாண்டான். அவனுக்குப் பிறகு பாண்டி நாட்டை யரசாண்டவன் தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். |