பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்451

கருதிக்கொண்டிருப்பதில் வியப்பில்லை. அவருடைய முடிபுகள் தவறானவை என்பதை இதுவரையில் யாரும் விளக்காமல் இருப்பதுதான் வியப்பைத் தருகிறது.

வையாபுரிப் பிள்ளை அவர்கள் காலஞ்சென்றவுடனே வெளிவந்த அவருடைய ‘தமிழ் மொழி, தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் ஆங்கில நூலிலே (History of Tamil Language and Literature (1956) New Century Book House, Madras 2.) பல பிழைபட்ட தவறான கருத்துக்கள் கூறப்படுகின்றன. இது ஆங்கில நூலாக இருப்பதனாலே, இதனைப் படிக்கிற தமிழ் அறியாத மற்றவர்கள், இவருடைய பிழையான கருத்துக்களை உண்மையானவையென்று நம்புகிறார்கள். இவருடைய தவறான கருத்துக்கள் மேலைநாடுகளிலும் பரவி, தமிழ்மொழியைப் பற்றியும், தமிழ் இலக்கியங்களைப்பற்றியும் பிழைபடக் கருதும்படி செய்கின்றன ஏன்? நமது நாட்டிலும் இவருடைய தவறான முடிபுகளை நம்புகிறவர்களும் பலர் உள்ளனர்.

இங்கு, பாண்டியர் நிறுவிய தமிழ்ச் சங்கத்தைப் பற்றிப் பிள்ளை யவர்கள் கூறும் கருத்தை ஆராய்வோம். இவர் ஆங்கிலத்தில் எழுதிய ‘தமிழ் மொழி, தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் நூலிலே இவ்வாறு எழுதுகிறார்:

“வச்சிரநந்தியின் பேர்போன சங்கம் கி. பி. 470-இல் நிறுவப் பட்டது. தொல்காப்பியம் இச்சங்கத்தின் முதல் வெளியீடாக வெளிப் பட்டிருக்கக் கூடும் (பக்கம் 14). கி. பி. 470-இல் தமிழ் மொழியிலும் தமிழ் இலக்கியத்திலும் ஒரு முதன்மையான நிகழ்ச்சி ஏற்பட்டது. அந் நிகழ்ச்சி என்ன வென்றால், மதுரையிலே வச்சிர நந்தியின் மேற் பார்வையில் நிறுவப்பட்ட தமிழ்ச் சங்கமாகும். (பக்கம்-58) பழைய பாண்டியருக்குரிய சாசனங்களில், சின்னமனூர்ச் சிறய செப்பேட்டுச் சாசனம் (கி. பி. 10-ஆம் நூற்றாண்டு)மதுரையில் இருந்த சங்கத்தைக் கூறுகிறது. தலையாலங்கானத்துப் போர் வென்ற நெடுஞ்செழியனுக்குப் பிறகு இருந்த ஒரு பாண்டியனால் மதுரைத் தமிழ்ச் சங்கம் நிறுவப் பட்டதாக இச் சாசனம் கூறுகிறது. இச் சாசனம் கூறுகிற சங்கம் வச்சிர நந்தி ஏற்படுத்திய சங்கம் ஆகும். வச்சிரநந்தி ஏற்படுத்திய சங்கம் 25 ஆண்டுகள் நிலைபெற்றிருக்கக்கூடும். (பக்கம் 59) மதுரையில் இருந்த சங்கம் என்னும் பெயரால் அழைக்கப்பட்ட மூன்று கழகங்களும் சமணர்களால் உண்டாக்கப்பட்டவை. இவை சமண சமயத்தைச் சேர்ந்த ஆசிரியர்களின் முயற்சியால் உண்டாக்கப்பட்டவை என்பதைச் சங்கம்