பக்கம் எண் :

452மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

என்னும் பெயர் ஆதரிக்கிறது. (பக்கம் 60) வச்சிர நந்தியின் சங்கத்தைப் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால் அச்சங்கம் ஏற்பட்ட பிறகு குறிப்பிடத்தக்க அளவு இலக்கண நூல்களும் அற நூல்களும் வெளி வந்திருப்பது அதனுடைய பெரிய வெற்றிக்குச் சான்றாக இருக்கிறது. (பக்கம் 161) -

பிள்ளையவர்கள் இவ்வாறு தமது ‘தமிழ் மொழி, இலக்கிய வரலாறு’ என்னும் ஆங்கில நூலிலே எழுதியிருக்கிறார். இதன் தெளிவான பொருள் என்னவென்றால் - வச்சிரநந்தி என்னும் சமணர் கி. பி. 470 இல் மதுரையில் தமிழ்ச் சங்கத்தை நிறுவினார், சமணர்கள்தாம் தமிழ்ச் சங்கத்தை ஏற்படுத்தினார்கள், வச்சிரநந்தி ஏற்படுத்திய தமிழ்ச் சங்கத்தில் தான் தொல்காப்பியம் இயற்றப்பட்டது. தொல்காப்பியமும் தமிழ்ச் சங்கமும் கி. பி. 5-ஆம் நூற்றாண்டில் தோன்றியவை என்பனவாம்.

இவற்றை நாம் ஆராய்வோம். சின்னமனூர்ச் செப்பேட்டை இவர் ஆதாரம் காட்டுகிறார். அச் செப்பேட்டின் செய்தி இது.

தடம் பூதம் பணிகொண்டு
தடாகங்கள் பலதிருத்தியும்
அரும்பசிநோய் நாடகற்றி
அம்பொற்சித்ர முயரியும்
தலையாலங் கானத்திற்
றன்னொக்க லிருவேந்தரைச்
கொலைவாளிற் றலைதுமித்துக்
குறைத்தலையின் கூத்தொழித்தும்
மஹாபாரதத் தமிழ்ப் படுத்தும்
மதுராபுரிச் சங்கம் வைத்தும்
மஹாராஜரும் ஸார்வ பௌமரும்
தம்மகிமண்டலங் காத்திகந்தபின்...          (S.II., Vol. III. . 454)

வையாபுரிப் பிள்ளையவர்கள் மேற்கோள் காட்டாத இன்னொரு பாண்டியனுடைய செப்பேட்டுச் சாசனமும் பாண்டிய மன்னர் மதுரை யில் தமிழ்ச் சங்கம் நிறுவிய செய்தியைக் கூறுகிறது. பாண்டியர் பராந்தகன் வீரநாராயணன் எழுதிய அச்செப்பேட்டுச் சாசனத்தின் பகுதி இது:

“மண்ணதிரா வகைவென்று
தென்மதுரா புரஞ்செய்தும்