4. பாண்டியன் நெடுமாறன் கால ஆராய்ச்சி அரிகேசரி மாறவர்மன் என்னும் பாண்டியன் நெடுமாறன் (கூன் பாண்டியன்) காலத்தை ஆராய்வோம். இந்தப் பாண்டியனைத் திரு ஞானசம்பந்தர் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்துக்கு மாற்றினார். அன்றியும் ஞானசம்பந்தர் சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியாரின் நண்பர். ஆகவே, ஞானசம்பந்தர், பாண்டியன் நெடுமாறன், சிறுத் தொண்டர் ஆகிய இவர்கள் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள். சிறுத் தொண்டராகிய பரஞ்சோதியார், மாமல்லன் நரசிம்மவர்மனுடைய சேனைத் தலைவராக இருந்தவர். இவ்வரசன் பொருட்டுச் சளுக்கிய அரசனான இரண்டாம் புலிகேசியின் தலைநகரமாகிய வாதாவி நகரத்தின் மேல் படையெடுத்துச் சென்று அந் நகரத்தை வென்றார். வாதாபி நகரம் வெல்லப்பட்டது கி. பி. 642 -இல். இந்தத் தேதி எல் லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டது; ஐயப்பாட்டிற்கு இடமில்லாதது. ஆகவே கி. பி. 642-இல் சிறுத்தொண்டர், பாண்டியன் நெடுமாறன், ஞான சம்பந்தர் ஆகிய மூவரும் இருந்தார்கள் என்பதில் யாதொரு ஐயமும் இல்லை. இம் மூவரில் ஞானசம்பந்தர் வயதில் இளையவர். சிறுத் தொண்டரும் நெடுமாறனும் வயதினால் சம்பந்தருக்கு மூத்தவர்கள். இது எல்லோரும் அறிந்த உண்மை. ஆனால், சரித்திரப் பேராசிரியர் நீல கண்ட சாஸ்திரி அவர்கள் எழுதிய “பாண்டிய இராச்சியம்” என்னும் ஆங்கில நூலிலே, பாண்டியன் நெடுமாறனான கூன் பாண்டியன் சம்பந்தருக்கு இளையவன் என்று கூறுகிறார்.1 இது விசித்திரமான வியக்கத்தக்க புதிய செய்தி. ஞானசம்பந்தர் தமது பதினாறாவது வயதில் இவ்வுலகத்திலிருந்து மறைந்தார். அவர் கூன்பாண்டியனைச் சைவனாக்கியபோது அவருக்கு உத்தேசம் வயது பதினான்கு. 14-வயதுள்ள சம்பந்தருக்குப் பாண்டியன் இளையவனாக இருந்தான் என்றால் அப்போது பாண்டிய னுக்கு வயது 12- ஆக இருக்கவேண்டும். பாண்டி மாதேவிக்கு வயது 10-ஆக இருக்கவேண்டும். அப்படியானால் பாண்டியன் நெடுமாறன் 12-வயதுக்கு முன்னரே அரசாட்சி பெற்றிருக்கவேண்டும். இதற்குச் சான்று என்ன? சாஸ்திரியார் இதற்குச் சான்று எங்கே கண்டார்?
* வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் (1953) நூலில் உள்ள கட்டுரை. 1. The Pandian Kingdom by K.A. Nilakanta Sastriï a1929ï P. 54. Note I. |