பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 461 |
நண்பரான ஞானசம்பந்தர், சம்பந்தரால் சைவனாக்கப்பட்ட நெடுமாறன் இவர்களின் காலத்தை ஆராய்ந்து பார்த்தால், பாண்டியன் நெடுமாறன் அரசாட்சிக்கு வந்தது கி. பி. 652-க்கு முன்னதாக வேண்டும் என்பது திட்டமாகத் தெரிகிறது. ஆகவே சாஸ்திரியார் கி. பி. 670-இல் நெடுமாறன் ஆளத்தொடங்கினான் என்பது தவறாகிறது. சம்பந்தர்-சிறுத்தொண்டர்-நெடுமாறன் இவர்களைப் பற்றிய ஆராய்ச்சியில் இவ்வளவு முரண்பாடான குழப்பங்களைத் தமது நூலில் எழுதிவைத்த சரித்திரப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார், இன்னொரு தவறையும் செய்து வைத்தார். தமது “பாண்டிய இராச்சியம்” என்னும் நூலில், இரண்டு வெவ்வேறு அரசர்களை ஒருவராகப் பிணைத்துக் கூறுகிறார். வேள்விக்குடி சாசனத்தில் கூறப்படுகிற அரிகேசரி மாறவர்மனையும் (இவனே கூன் பாண்டியன்), சின்னமனூர் பெரிய சாசனம் கூறுகிற அரிகேசரி பராங்குசனையும் வெவ் வேறு அரசராகக் கொள்ள வேண்டியிருக்க, சாஸ்திரியார் இருவரை யும் ஒரே அரசனாகக் கொண்டார். அரிகேசரி மாறவர்மனும் அரிகேசரி பராங்குசனும் முறையே பாட்டனும் பேரனும் ஆவார்கள். சாஸ்திரியார் இருவரையும் ஒருவனாக இணைக்கிறார். ராவ் பகதூர் H. கிருஷ்ண சாஸ்திரி யும்,1 ழூவோ தூப்ராய் அவர்களும்2 இந்த இரண்டு அரசர்களையும் பாட்டனும் பேரனும் ஆகக்கொண்டு ஆராய்கிறார்கள். இதுவே சரியாகும். கூன்பாண்டியனாகிய அரிகேசரி நெடுமாறன் காலத்தை சாஸ்திரியார் கி. பி. 670 - முதல் 710 - வரையில் என்று கணக்கிடுகிறார். இது தவறு என்பதை மேலே காட்டினோம். பாட்டனையும் பேரனையும் ஒரே ஆளாகக் கருதிக்கொண்டு அதன்படி கணக்குப்போட்டதனால் ஏற்பட்ட தவறே இது. பாட்டனையும் பேரனையும் வெவ்வேறு அரசராகக் கொண்டு காலத்தைக் கணக்கிட்டால் கூன்பாண்டியனுடைய காலம் கி. பி.650-முதல் 675- வரையில் என்பது ஆகும். வாதாபி கொண்ட கி.பி. 642-ஐ ஆதாரமாகக்கொண்டு மேலே நாம் ஆராய்ந்துகண்ட முடிவும் இந்தக் காலத்தை ஒத்திருக்கிறது. பாண்டியன் நெடுமாறன் கி.பி. 650-இல் முடிசூடினான் என்பதைவிட கி. பி. 645-இல் முடிசூடினான் என்று கொள்வதே பொருத்தமானது.
1. S.I.I. Vol. III, Part IV, P. 446. 2. The Pallavas, P. 67. |