பக்கம் எண் :

64மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

இவனது போர்வீரர்கள் - இவன் கூறும் வஞ்சின மொழிகள் இவனுக்குக் கைகூடுமாறு செய்த ‘ஒன்றுமொழி மறவர்’45 - வீரக்கழலே அன்றிக் கொடைக்கழலும் அணிந்திருந்தனர்: அம்பு தைத்துப் புண் ஆறிய அழகிய மார்பினை உடையவர்கள். இவர்கள் தும்பைப்பூச் சூடியதில்லை. அதாவது, வலியச் சென்று போர் தொடுத்தது இல்லை; பனம்பூமாலையை அணிந்திருந்தனர்.46

கொடைத்தன்மை

போர் வெற்றியால் பகைவர்கள் நாட்டிலிருந்து இவனுக்குக் கிடைத்த பொருள்கள்,47 கடல் வாணிகத்தால் இவனுக்குக் கிடைத்த பொருள்கள்48 ஆகியவற்றை இவன் கொடையாக வழங்கினான்.

விறலியருக்கு ஆரம், பிடி முதலானவற்றை வழங்கினான்;49 பாணர்க்குப் பொன்னாலான தாமரையை வழங்கினான்;50 வீரர்களுக்குக் கள்ளும் மாவும் வழங்கினான்;51 கொண்டி மன்னர்களுக்குப் போர்க் களிறுகளை வழங்கினான்.52 அகவலர்களுக்குக் (குறி கூறுபவர் களுக்குக்) குதிரைகளும்,53 பரிசில் நாடி வந்தவர்களுக்குக் களிறுகளும் இவன் வழங்கினான்.54

பதிற்றுப்பத்தில் தன்னைப் பாடிச் சிறப்பித்த பரணர் என்னும் புலவர்க்கு உம்பற்காடு என்னும் பகுதியில் அரசுக்குக் கிடைத்த வருவாய் அனைத்தையும் கொடுத்தான். அதனுடன் இவனது அருமை மகன் குட்டுவன் சேரல் என்னும் பெயர் கொண்டவனைப் புலவர்க்குப் பணிவிடை செய்வதற்கென்று அனுப்பிவைத்தான்.55 வடநாட்டு வெற்றிக்குப்பின் கங்கையாற்றின் தென்கரையில் பாடி வீடமைத்துத் தங்கியிருந்தபோது தமிழ்நாட்டிலிருந்து வந்த மாடலன் என்னும் மறையவனுக்குத் தன் எடைக்கு எடை பொன் கொடுத்தான் என்ற செய்தியைச் சிலப்பதிகாரத்தால் அறியலாம்.


45. ௸ 41 : 18

46. ௸ 42 : 1

47. ௸ 44 : 5

48. ௸ 48 : 4-5; புறம். 343 : 5-6

49. ௸ 43 : 20-22, 48 : 2, 49 : 2-4

50. ௸ 48 : 1

51. ௸ 42 : 12 - 15

52. ௸ 43 : 25

53. ௸ 43 : 28

54. ௸ 43 : 21 - 25

55. பதிற். பதி. 5 : 3