பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்65

பண்பு நலம்

இவன் பெருஞ்சினம் கொண்டவன்.56 போர் முழக்கத்தைக் கேட்பதில் பெரும் விருப்பினன்.57

சினத்தீயைப்போலவே இவன் தண்ணிய சாயலையும் உடையவன். இவனது அருள் காவிரி நீர் போலவும், குமரி முனை நீர் போலவும் பயனும், புனிதத் தன்மையும்58 உடையதாயிருந்தது.

தோற்றப் பொலிவு

சந்தனம் பூசி அதன்மேல் வண்ணக் குழம்புகளால் வகைபெற எழுதி வண்டுகள் மொய்க்குமாறு பொலிவுடன் இவனது மார்பு விளங்கியது.59 பொன்னாலாகிய மாலையையும் அணிந்திருந்தான்.60 கணையமரம் போன்ற வலிமை மிக்க விலா எலும்புக் கட்டுடன் அகன்றிருந்தது அவன் மார்பாகும்.61 மன்னர்களின் ஏழு முடிகளைக் கோத்து அணிந்திருந்தான் எனக் கூறுவோரும் உளர்.62 இவன் பார்வைக்கு அடக்கம் உடையவனாகக் காணப்பட்டான். எனினும், யாருக்கும் வணங்காத ஆண்மை உடையவனாக விளங்கினான்.63 யானைமீதும் தேர்மீதும் இவன் ஏறிச் சென்றான்.64

சிறப்புச் செயல்கள்

இவனது செயல்களில் சிறப்பு மிக்கனவாக இரண்டைக் குறிப்பிடலாம். அஃதாவது கற்பரசி கண்ணகிக்குச் சிலையமைத்துத் தெய்வமாக்கி வழிபட்டதும், காஞ்சியம் பெருந்துறை என்னுமிடத்தில் தன் ஆயத்தார் புடைசூழ நீர்விழாக் கொண்டாடியதும்65 ஆகும்.

மனைவி

இவனது மனைவி வேண்மாள் ஆவாள். இவளைச் சோழர் குடிப்பெண் என்பர். இவள் சிறந்த அழகியாவாள்.66 இவன் பிற மகளிரோடு மகிழ்ந்திருந்ததாகத் தெரிகிறது.67


56. ௸ 49 : 17

57. ௸ 43 : 9 - 10

58. ௸ 50 : 6 - 7

59. ௸ 48 : 11-12, 50 : 16-18

60. ௸ 43 : 11

61. ‘எழுமுடி மார்பின் எய்திய சேரல்’

பதிற். 45 : 6

62. பதிற். 45 : 6 உரை

63. ௸ 48 : 9

64. ௸ 41 : 7, 15, 42 : 18-20

65. ௸ 48 : 18, சிலப்பதிகாரம்

66. பதிற். 42 : 7

67. ௸ 50 : 18