பக்கம் எண் :

98மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

தம் வேல்களைப் போர்க்களத்திலேயே போட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர். இவ்வாறு ஓடியவர்களின் வேல், கபிலர் நன்றா என்னும் குன்றின் மீதேறிக் கண்ணிற் கண்ட ஊர்களையெல்லாம் பரிசாகப் பெற்றாரே அதனைக் காட்டிலும் அதிக எண்ணிக்கை உடையனவாம்.

பாண்டியன் மாறன் வீழ்ச்சி

‘மாறன் ’ என்று பெயர் முடிவதைக்கொண்டு இளம்பழையன் மாறன், பாண்டியன் என்பது விளங்கும்.17 இந்தப் பாண்டியன் வித்தை என்னும் ஊரை ஆண்டவன். சோழனை வென்றது போலவே இந்த மாறனையும் இளஞ்சேரல் இரும்பொறை வஞ்சினம் கூறிப் பேராடி வென்றான். எனவே, இவனும் விச்சிக்குத் துணை நின்றவன் என்பது உய்த்துணரக் கிடக்கின்றது.

முற்கூறியதுபோல விச்சி அரசன் போரில் மாண்டான். கோப்பெருஞ்சோழனும், இளம்பழையன் மாறனும் சிறைப் பிடிக்கப்பட்டனர். இவர்கள் வஞ்சி மூதூருக்குக் கொண்டுவரப்பட்டனர். காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த சதுக்கப் பூதத்தை இவன் வஞ்சிக்குக் கொண்டுவந்து சாந்தி விழா நடத்தினான்.

(செங்குட்டுவன் வடநாட்டுக் கனக விசயரைச் சிறைப்படுத்திக் கொண்டுவந்தான். இவனோ தமிழ்நாட்டு வேந்தரைச் சிறைப் பிடித்துக் கொண்டுவந்தான். இருவரும் வஞ்சிக்குத்தான் கொண்டு வந்தனர். செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை அமைக்க இமயத்தி லிருந்து கல் கொண்டுவந்தான். இளஞ்சேரல் இரும்பொறையோ காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த சதுக்கப் பூதத்தைக் கவர்ந்து சென்றான். இருவரும் விழா நடத்தினர். செங்குட்டுவன் சோழ பாண்டியரை அரவணைத்துக் கொண்டவன். இவனோ பகைத்துக் கொண்டவன்.)

இவனது போர்பற்றிப் பொதுவகையில் பல செய்திகள் தரப்படுகின்றன. இவன் வேற்று நாட்டின்மீது படையெடுத்துச் சென்று அங்குத் தங்கியிருந்தான்.18 அப்போது அவன் யானைப் படையுடன் பாசறையில் தங்கினான்.19 கொல்லக் கொல்லக் குறையாத தானையில் யானை, மா, மறவர், தேர், தோல் படைகள் இருந்தன.20 இவன் பல


17. `பதிற். பதி. 9 : 7

18. ௸ 81 : 18

19. ௸ 84 : 4 - 5

20. ௸ 82 : 13, 83 : 3 - 4